Home Common Health Problems கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன்

கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன்

928
1
SHARE

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் புதிய சகாப்தம்

Uterus transplantation

“இருதயம், ஈரல், கிட்னி போன்ற முக்கியமான உறுப்புகளை ஒருவரிடம் இருந்து தானம் பெற்று இன்னொருவருக்கு பொருத்தும் ‘உறுப்பு மாற்று ஆபரேஷன்’ இந்தியாவில் பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது. அதுபோல் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனும் (Uterus transplantation)இந்தியாவில் நடைபெறப்போகிறது. இது குழந்தையின்மைக்கான மருத்துவத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும்” என்கிறார், இந்தியாவின் பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.

Dr Jeyarani

சென்னை, வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தின் இயக்குனரான டாக்டர் கே.எஸ்.ஜெயராணி ‘நவீன கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன்’ பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ளும் தகவல்கள்!

“மனித இனத்தின் உற்பத்தி மையமாகவும், தாய்மையின் சின்னமாகவும் விளங்குவது, கர்ப்பப்பை! ஆனால் சில பெண்கள் கர்ப்பப்பை இல்லாமலே பிறக்கிறார்கள். சிலருக்கு கர்ப்பப்பை இருந்தாலும், முழு வளர்ச்சி பெறுவதில்லை. வேறு சிலருக்கு கர்ப்பப்பையில் தீர்க்க முடியாத கோளாறுகள் இருந்துகொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளை கொண்டவர்கள், திருமணமாகி கணவரோடு தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டிருந்தாலும் குழந்தையின்மையால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் (Uterus transplantation).

இதயம், ஈரல், கிட்னி போன்றவைகளை தானம் பெற்று உடலில் இணைப்பதுபோல் இப்போது கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது குழந்தையின்மைக்கான நவீன மருத்துவத்தில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. ஏன்என்றால் சோதனைக்குழாயில் கருவை உருவாக்கினாலும் அது குழந்தையாக வளர கர்ப்பப்பை தேவைப்படுகிறது. கர்ப்பப்பைக்கு மாற்றாக எதுவுமே இல்லை என்பதால், கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு பெண்ணுக்கு பிறப்பிலே கர்ப்பப்பை இல்லை என்றாலும், கர்ப்பப்பை சீரற்ற நிலையில் இருந்தாலும் அதை தெரிந்துகொள்வதற்கு அந்த பெண்ணின் 15 வயது வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அவள் வயதை ஒத்த பெண்கள் வயதுக்கு வந்துவிட்ட நிலையில் அவள் மட்டும் வயதுக்கு வராமல் இருக்கும்போதுதான் பெற்றோர் ஏதோ பிரச்சினை இருப்பதாக கருதுகிறார்கள். டாக்டரை சந்திக்கும்போது அந்த பெண்ணுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை, மரபணு பரிசோதனை போன்றவைகளை செய்து அவளுக்கான குறைபாடு கண்டறியப்படுகிறது. அப்போதுதான் அவளுக்கு கர்ப்பப்பை இல்லாமல் இருப்பதோ அல்லது அதில் குறைபாடு இருப்பதோ தெரியவருகிறது. ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லை என்றாலோ, அதில் பெரிய அளவில் கோளாறுகள் இருந்தாலோ அவளுக்கு மாதவிலக்கு தோன்றாது. குழந்தையும் உருவாகாது.

இயந்திரமயமான இந்த நவீன காலத்தில் உருவாகியிருக்கும் இன்னொரு பிரச்சினையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிலருக்கு தலைபிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவானால், அவரது உயிரை காப்பாற்றுவதற்காக, கர்ப்பப்பையை ஆபரேஷன் செய்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் மூலம் அந்த பெண் மீண்டும் தாய்மையடைய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இன்னொரு பிரச்சினையையும் குறிப்பிட்டாக வேண்டும். பெரும்பாலான பெண்கள் திருமணமான சில மாதங்களிலே தாய்மையடைந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அது தங்களது வேலைக்கும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இடைஞ்சலாக இருக்கும் என்று கருதி முதல் கர்ப்பத்தை அவர்கள் கலைக்க விரும்புவார்கள். அப்படி கருச்சிதைவு செய்யும்போது கிருமித்தொற்று மற்றும் கர்ப்பப்பை உள் தசைகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்களும் கர்ப்பப்பை இருந்தும் பிற்காலத்தில் தாய்மையடைய முடியாமல் தவிப்பார்கள்.

கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது முழு தகுதிக்கூ¤ய கர்ப்பப்பை அமைந்திருக்காதவர்களில் ஒரு பகுதியினர் வாடகைத்தாய் முறையை விரும்புகிறார்கள். அந்த பெண், தனது கர்ப்பப்பைக்கு பதிலாக, இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார். தனது கணவரது உயிரணு, தனது கருமுட்டை இரண்டையும் பரிசோதனை குழாய் முறையில் இணைத்து கருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் அதை செலுத்தி, வளர்த்து பிரசவிக்கிறார்.
இந்த முறையில் பெரும்பாலானவர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். திருப்தியடையாமல் தன் கர்ப்பப்பை மூலமே தனது குழந்தை வளரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ‘கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை’ தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த ஆபரேஷனுக்கான ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் பல வருடங்களாக நடந்துகொண்டிருந்தன. கடந்த நூற்றாண்டின் இறுதியில்தான் இதில் நம்பிக்கையை உருவாக்கும் ஒளிக்கீற்றுகள் உருவாகின. முதலில் இந்த மாற்று ஆபரேஷனை சில பிராணிகளிடம் செய்தார்கள். அது வெற்றிகரமாக அமைந்தது.

அதை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் போட்டிபோட்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை செய்ய நேரடியாக களத்தில் இறங்கின. 2002-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாக பெற்று தேவைப்பட்ட இன்னொரு பெண்ணுக்கு பொருத்தினார்கள். புரட்சிகரமான இந்த ஆபரேஷனில் திடீர் பின்னடைவு ஒன்று 79-வது நாள் ஏற்பட்டது. இன்பெக்ஷன் மூலமான தவிர்க்க முடியாத காரணத்தால், இணைக்கப்பட்ட கர்ப்பப்பை மீண்டும் எடுத்து மாற்ற வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால் அது தோல்வி அடைந்த முயற்சியாக கருதப்பட்டது.

அந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதாவது 46 வயதான பெண்ணிடம் இருந்து எடுத்து, 26 வயதான பெண்ணுக்கு பொருத்தினார்கள். இந்த 20 வயது இடைவெளி தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.
அடுத்து, குறைபாடுகளை களைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து கொண்ட தாய்மார்கள் அரங்கேற்றியது, சுவீடன். 2011-ல் அங்கு முதல் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் நடந்தது. 2014-ல் மாற்று கர்ப்பப்பை மூலம் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஆங்காங்கே சில நாடுகள் இந்த ஆபரேஷனில் வெற்றி கண்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 15 குழந்தைகள் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் வாயிலாக பிறந்திருப்பதாக தெரியவருகிறது.

Uterus transplantation

இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, ‘ஏன் இந்த ஆபரேஷன்கள் பெருவாரியாக நடக்கவில்லை?’ என்ற கேள்வி எழலாம். இதற்கு ஆறு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

1. இதயம், கிட்னி போன்ற உறுப்புகள் உயிர்வாழ அத்தியாவசியமானவை. அதனால் அவைகளை பற்றி பெருமளவு ஆய்வுகள் நடக்கின்றன. அதிக அளவு ஆபரேஷன்களும் நடக்கின்றன.கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் உயிர்பிழைக்க வைப்பதற்கானது அல்ல!

2. ஒரு பெண்ணுக்கு மாற்று கர்ப்பப்பை பொருத்தினாலும் அவர் இயற்கையாக கருத்தரிக்க முடியாது. பரிசோதனை குழாய் மூலம் கரு உருவாகச் செய்துதான், அந்த கர்ப்பப்பைக்குள் செலுத்தவேண்டும்.

3. அந்த கர்ப்பப்பை, கருவை உள்வாங்கிக்கொள்ளவும், கருவை வளர்க்கவும் தேவையான மருந்துகளை தொடர்ந்து வழங்கிவர வேண்டும்.

4. இன்னொருவரிடமிருந்து பெற்ற கர்ப்பப்பை இணைக்கப்பட்ட பெண்ணின் உடலோடு இயற்கையாக இணைந்து, இயங்காது. அதனால் அந்த கர்ப்பப்பையில் வளரும் குழந்தையின் அசைவுகளை தாயால் உணர முடியாது. அசைவுகளை ஸ்கேனிங் மூலமே தெரிந்துகொள்ள முடியும். அதுபோல் பிரசவ வலியையும் தாயால் உணர முடியாது. அதனால் குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சியடைந்ததை தெரிந்ததும் சிசேரியன் மூலம் வெளியே எடுக்கவேண்டும்.

5. கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு அந்த கர்ப்பப்பையை நீக்க வேண்டிய நிலையும் உருவாகும்.

6. அடுத்தவரின் கர்ப்பப்பையை அந்த பெண் எவ்வளவு காலம் சுமக்கிறாரோ அவ்வளவு காலமும் அவர் தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அந்த மருந்துகளின் பின்விளைவுகள் அவர் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவும் செய்யலாம். ஆனாலும் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் மருத்துவத்துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான்!

இந்தியாவில் இத்தகைய ஆபரேஷன் நடக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த நாள், குழந்தையின்மைக்கான சிகிச்சையில் புதிய சகாப்தமாக அமையும்.

SHARE
Previous articleகாதல்
Next articleகாதல் – 2

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here