Home Common Health Problems மாதவிலக்கு எப்படி வருகிறது ?

மாதவிலக்கு எப்படி வருகிறது ?

299
0
SHARE

பெண், பாகம் – 7

மாதவிலக்கு என்பது கருவுறுப்புகள் முதிர்ச்சியடைந்து தாய்மைக்கு தயார் என்பதை உணர்த்தும் நிகழ்வாகும்.  சினைப்பையிலிருந்து முட்டை முதிர்ச்சியடைந்து வெளியாகி, சினைமுட்டையாகிவிட்டால் கருப்பைக்குழாய் வழியாக வரும் என கருப்பை எதிர்பார்த்து, அதற்காகத் தன்னை தயார் செய்துகொள்வதும், முட்டை கருவுறாமல் போகும்போது இருபத்தெட்டாம் நாளில் சிதைந்து போன முட்டையையும், தன்னுடைய உள் வரிசவ்வுகளையும் உதிர்ந்து கழிவுகளாக வெளியேற்றும் நிகழ்ச்சி தான் மாதவிலக்கு.

தன்னிடத்தில் மங்களகரமான நிகழ்வு நடக்கும் என எதிர்பார்த்து, ஒவ்வொரு முறையும் அது நடக்காமல் போகும் போது கருப்பை உதிர்க்கும் இரத்தக் கண்ணீர் இது என்றுகூட சொல்லலாம்.

Woman

மாதவிலக்கின் போது சுமார் எண்பது மில்லி இரத்தம் வரை வெளியேறும், உடம்பில் இவ்வளவு இரத்தம் வெளியேறுகிறதே என வருத்தப்படாதீர்கள். இவை கழிவுகள் தான்.  இது வெளியேறாவிட்டால் தான் வருத்தப்பட வேண்டும்.  உள்ளுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கலாம்.

மாதவிலக்கு 28 நாட்களுக்கு ஒருமுறையோ, 23 முதல் 34 நாட்களுக்கு ஒருமுறையோ நடக்கும் . இந்த நாட்களில் மூன்று விதமான நிகழ்வுகள் பெண்ணின் உடலில் நடந்துகொண்டிருக்கும்.  இதை கருவணுக்கூடு தூண்டப்படும் காலம், கருத்தரிப்பை ஒழுங்கு படுத்துகிற காலம் என மூன்றாகப் பிரித்து கொள்ளலாம்.

பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கிற ஹார்மோன் சினைப்பை ஊக்கி ஹார்மோனைத் தூண்டி, அதிலுள்ள முட்டைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.  இதனால் சுமார் மூன்று முதல் முப்பது முட்டைகள் வரை வேகமாக வளரும்.  இந்த முட்டைகளை உள்ளடக்கியிருக்கும் பகுதிக்கு அண்டம் என்று பெயர்.  இந்த அண்டம் தான் கருப்பை இயக்குநீர் என்ற ஹார்மோனை சுரந்து, கருப்பைக்குள் கரு வளர்வதற்கான சூழலை உண்டாக்குகிறது.

முதல்முறை ஹார்மோன் சுரந்து முட்டைகளைத் தூண்டிய பிறகு, இரண்டாவது முறையாக இரண்டாவது வாரத்திற்குப் பிறகு முட்டைகளை முதிர்ச்சியடைய செய்யவும், அது கருவுருவதற்கு ஏற்றதாக இருக்கவும் கருத்தரிப்பு ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரக்கிறது.  இது ஒரே ஒரு முட்டையைக் கிழித்து கருப்பைக் குழாய் வழியாக கருப்பைக்கு முட்டை வர உதவுகிறது.

இரண்டாவது வாரத்திற்குப் பிறகு அடுத்த மாதப்போக்கு வரும் வரையில் இந்த ஹார்மோன்கள் வேறுவித வேலைகளையும் செய்யும்.  அதாவது, முட்டையை வெளியேற்றிய கருவணுக்கூடு அண்டச் சுரப்புத் திசுவாக மாறி கருத்தரிப்பு நடக்க உதவுகிறது. கருத்தரிப்பு நடக்காவிட்டால் மாதவிலக்கு உண்டாகிறது. இந்த  மாதிரியான நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியான நடைபெற்றுக் கொண்டுவரும்.

Dr Jeyarani

– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here