Home Common Health Problems டீன் ஏஜ் 

  டீன் ஏஜ் 

  242
  0
  SHARE
  பெண் இனப்பெருக்க உறுப்புகள்
  பெண்களுக்கான ஹார்மோன்கள்
  பெண்ணின் இனப்பெருக்க உருப்பைப் பொறுத்தவரை அதில் ஏற்படும் எல்லா மாற்றங்களுக்கும் ஹார்மோன்களே மூலக் காரணங்கள். இரத்தம் போல நாளங்கள் மூலமாக உடலின் பிற பகுதிகளுக்குக் கடத்தப்படாமல் நேரடியாக ரத்தத்தில் கலக்கின்றன. நாளமில்லாமலேயே தோன்றும் இந்த திரவச் சுரப்பிகளுக்கு நாளமில்லாச் சுரப்பிகள் என்றும், இவை சுரக்கும் சுரப்பு நீருக்கு ஹார்மோன் என்றும் பெயர்.
  நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளுக்கு எல்லாம் தலைவர் போல விளங்குவது பிட்யூட்டரி என்ற சுரப்பி, இதை மூளையிலுள்ள தலாமஸ் என்ற பகுதி கட்டுப்படுத்துகிறது. இது நேரிடையாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச் செய்கிறது; உடலில் மாற்றங்களை உண்டாக்குகிறது.
  இதன் முன்பகுதியில் கொனடோடிராபின் அல்லது பாலின ஊக்கி என்ற முக்கிய ஹார்மோனாகச் சுரக்கிறது. இந்த கொனடோடிராபின் ஹார்மோன், கருவணுக்கூட்டைத் தூண்டும் ஹார்மோனையும் (ஃபாலி கியூலர் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்- எப்.எஸ் .எச்.), கருத்தரிப்பதற்குரிய பருவத்திற்கு சினைப்பையை தயாராக்கும் லியூடினைசிங் ஹார்மோனையும் (எல்.எச்) சுரக்கிறது. இது தவிர ப்ரோலாக்டின் எனப்படும் பால் சுரப்பி ஊக்கி ஹார்மோனையும் வெளியிடுகிறது.
  பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாகச் செயல்பட ஆரம்பிக்கும்.
  மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை சுரக்கச் செய்து சினைப்பைகளுக்கு அனுப்பும். இதைத் தொடர்ந்து கருப்பை ஹார்மோன், மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகியவை சுரந்து செயல்பட ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன்களை ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் என்பார்கள். சுருக்கமாக எப்.எஸ்.எச். ஹார்மோன் எனவும் கூறுகிறார்கள்.
   
  எப்.எஸ்.எச். ஹார்மோனானது, முட்டைகளைத் தூண்டி முதிர்ச்சி செய்கிறது. கருவணுக் கூடுகளை எல்.எச். ஹார்மோன் தூண்டி முதிர்ந்த முட்டையை வெளியிட வைக்கிறது. எப். எஸ்.எச்- ஆல் தூண்டப்படும் முட்டைகளில் எது விரைவில் பெரிதாக முதிர்கிறதோ அது வெளிவருகிறது. மற்றவை தோன்றிய இடத்திலேயே மடிந்துவிடுகின்றன.
  முட்டையை கிரானுலேசா செல்கள் சூழ்ந்திருக்கும். இவை ஒவ்வொரு கருவணுக்கூட்டையும் (ஃபாலிக்கிள்கள்) வரிசைப்படுத்தி இரு வித பணிகளைச் செய்ய வைக்கிறது.
  முதலாவது முட்டைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுத்து அவற்றை பராமரிப்பது;
  இரண்டாவதாக பெண்மைக்கிளர்வி ஹார்மோன் எனப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சுரப்பது.
  இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதால்தான் பெண்களுக்கு மார்பகம் பெரிதாவது, இடுப்புக்கூடு சிறுத்து கொடியிடை உண்டாவது, பாலினப் பண்புகள் தோன்றுவது போன்றவையெல்லாம் நடைபெறுகின்றன.
  ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இரத்தத்தில் கலந்து மூளையை அடைந்ததும், கருவணு முதிர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளும் தலைமைச் சுரப்பி, உடனே எல்.எச். ஹார்மோனைச் சுரந்து அனுப்பிவைக்கிறது. இந்த ஹார்மோன் சுரந்த முப்பத்தாறு மணி நேரத்திற்குள் முட்டை வெளியாகிறது.
  ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரந்து அதிகரித்து, இன்னொரு ஹார்மோன் சுரப்பை அதிகப் படுத்துகிறது. இதை பீட் பேக் மெக்கானிசம் என்பார்கள்.
   
  இந்த ஒழுங்கு அமைப்பு சரியாக இருந்தால்தான் முதிர்ந்த முட்டை வெளியேறும் நிகழ்ச்சி இயல்பாக நடக்கும். அதில் குரோமோசோம்களும் சம அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும்; ஒரு விந்தணு உள்ளே நுழைந்ததும் மூடிக் கொள்ளும் திறன் பெற்றிருக்கும். இல்லாவிட்டால் முதிராத முட்டைகள் வெளியேறி, குறைபாடுள்ள கரு உருவாகும்.
   முட்டை வெளியானதையடுத்து அந்த வெற்றிடத்தில் உதிரம் மற்றும் பிற நுண்ணறைகள் (ஃபாலிக்கிள்கள்) நிரம்பி கெட்டியாகும்.
  கருவணு விடுபட்ட பிறகு கருவணுக்கூட்டுக்குள் நிரம்பிய இரத்தமானது கட்டியாகி அங்கிருந்த நார் போன்ற தசைகளுக்குப் பதிலாக அந்த இடத்தை  நிரப்பும். இதனை கார்ப்பஸ் லூட்டியம் அல்லது பழுப்பு சுரப்பிக்குமிழ் என்பார்கள். கருவணு விந்தணுவோடு இணையாமல் போனால் பழுப்புச் சுரப்பிக் குமிழ் பத்து நாட்களில் சிதைந்து அழிந்துவிடும். அதன்பிறகு மாத விலக்குத் தோன்றும்.
  சினைப்பைக்குள் மீதமிருக்கும் கிரானுலேசா செல்கள் ஈஸ்ட்ரோஜெனை உற்பத்தி செய்வதைப் போல, கருத்தரித்தால் கருப்பைக்குள் கருவைப் பதியம் செய்வதற்காக புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோனையும் சுரக்கும். ஆரம்பக் காலத்தில் கருவளர்ச்சிக்கு இந்த கார்ப்பஸ் லூட்டியம் சுரக்கும் புரொஜெஸ்டீரான் ஹார்மோனே போதுமானது. கார்ப்பஸ் லூட்டியம் சிதையும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.
  இவையெல்லாம் பருவமடையும் காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் ஹார்மோன் நிகழ்வுகளாகும்.


  – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here