Home Common Health Problems டீன் ஏஜ் 

    டீன் ஏஜ் 

    121
    0
    SHARE

    பாலுணர்வு சார்ந்த தகவல்கள் 

    பாலுணர்வு ஒரு பார்வை -2

    பாலுறவை விரும்பும் ஆண்களுக்கு இது நிகழ்வாக இருக்கும். ஆனால், பெண்களுக்கு இது வாழ்க்கை ஒப்பந்தம் என்ற நிலை நமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. தவிர, ஆணின் விருப்பத்திற்கு எளிதில் உடன்படும் பெண்ணை மலிவாக நினைத்துவிடும் போக்கும் இருப்பதால் விடலைப் பருவத்தில் பாலுறவு என்பது சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.

    மேல்நாடுகளில் இந்த நிலைகள் மாறிவருகின்றன. பெண்களும் விடலைப் பருவத்தில் பாலுறவை ஒரு நிகழ்வாக நினைக்கிறார்களே தவிர, வாழ்நாள் முழுவதும் தொடரும் பந்தமாக நினைப்பதில்லை. இதனால்தான் அங்கு கணவர் இல்லாமல் பிள்ளை பெற்றுக்கொண்டு வளர்க்கும் தனித் தாய்மார்கள் நிறைய இருக்கிறார்கள். மண வாழ்வில் பிரச்னை என அடிக்கடி பிரிந்துசென்று வேறு துணையை நாடுவோரும் இருக்கிறார்கள்.

    எந்த நாட்டிலுமே பாலுறவு என்பது விடலைப் பருவத்தில் விரும்பத் தகாத, இடையூறு ஏற்படுத்துகிற ஒரு நிகழ்வாக பெற்றோர் மற்றும் பெரியாரால் கருதப்பட்டு, தடை செய்யப்படுவதால், பாலுணர்வு எண்ணங்கள் அதிகம் இருந்தாலும் பாலுறவு கொள்ள இயலாத நிலையிருக்கிறது. இதனால் பாலுறவு பற்றி வண்ணக் கனவுகள், வேறுவிதமாக பாலுணர்வைத் தணிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை ஆண் பெண் இருபாலருமே மேற்கொள்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் சுய இன்பப் பழக்கம் என்பது. இதன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாலுணர்வைத் தணித்துக் கொள்கிறார்கள்; எதிர்பாலினரின் துணையை நாடவேண்டிய தேவையில்லை; யாரும் கருத்தரிப்பதில்லை; யாருக்கும் பால்வினை நோய்கள் தோன்றுவதில்லை.

    அப்படியிருந்தும் பெற்றோர் இதை ஏன் தவறு எனக் கூறுகிறார்கள்?

    மருத்துவ ரீதியாக கூறவேண்டுமானால் பெரும்பாலான இந்தியப் பெற்றோர்கள் உடற்கூறு பற்றி அறியாதவர்கள். தங்கள் விடலைப் பிள்ளைகள் சுயஇன்பம் செய்வதற்கான அடிப்படைக் காரணம் அவர்களுடைய ஹார்மோன்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் தூண்டுதல் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிவதில்லை. இது தவிர, பண்பாடு, கலாச்சாரம் என்ற ரீதியில் தங்களுடைய விடலைப் பருவத்தின் தூண்டல்களை அடக்கிப் பழக்கப்பட்டுப்போன பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் விடலைப் பருவத்தின் உணர்வுகளையும் அடக்குவதைக் கடமையாக கருதுகிறார்கள்.

    எல்லா பெற்றோரும் இந்த மனநிலை கொண்டவர்கள் அல்லர் என்பதும் உண்மை. சில பெற்றோர் தங்கள் விடலைப் பிள்ளை என்ன செய்யும் என்பதைத் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை, சிலருக்கு விடலைப் பருவத்தின் போது என்ன நடக்கும் என்பதும் அறியாமல் போவதால் அதைப் பற்றி தெரிந்துகொள்வதும் இல்லை. தங்களின் பாலுணர்வுத் திறன் குன்றிவரும் நிலையில், தங்கள் பிள்ளைகள் அதை அடக்க இயலாமல் தறிகெட்டுப் போவது ஏன் என சிலர் கருதுகிறார்கள், இத்தகைய சூழலில் தங்கள் பிள்ளையின் சுயஇன்பம் பற்றி அறியவரும் வேளையில் அது தவறு என நினைக்கிறார்கள்.

    இது தவறு, கேவலமானது, கடவுள் தண்டித்துவிடுவார், பாவம் என்றெல்லாம் குழந்தைகளுக்கு போதிக்கும்போது, இயற்கையாகவே அவர்களுக்குள் பய உணர்ச்சியும், கட்டுப்படுத்த இயலாத நிலையில் சுய இன்பத்தில் ஈடுபட்டுவிட்டு, பிறகு குற்ற உணர்ச்சியும் கொண்டவர்களாகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வளர்ந்து திருமணம் செய்துகொள்ளும் பொது பாலுறவுத் திறன் குன்றியவர்களாகி விடுகிறார்கள்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here