Home Diabetes சர்க்கரை நோய் பகுதி – 65

சர்க்கரை நோய் பகுதி – 65

415
0
SHARE

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாரடைப்பைப் பற்றிய சில முக்கிய விவரங்கள்
மாரடைப்பு திடீரென்று ஏற்படக்கூடியது. ஆனால், மாரடைப்பு தோன்றுவது ஒரு வாரமோ அல்லது அதற்கு முன்போ சில அறிகுறிகள் நோயாளிக்குத் தோன்றுகின்றன.

இவை, பெரும்பாலும் இதய வேதனை என்னும் ஆஞ்சைனா பெக்டோரில் வடிவத்தில் தோன்றுகிறது. இந்த வலி தோன்றும் இடம், இந்த வலியின் இயல்பு, வலி ஆகிய அனைத்துமே மாரடைப்புபோல் இருந்தாலும் வலி தோன்றி சில மணித்துளி அல்லது சில மணி நேரங்களில் மறைந்து விடுவது உண்மையான மாரடைப்பு நோய்க்கும், இதய வேதனைக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

இவ்வாறு முன் அறிவிப்பாக ஏற்படும் இந்த வலி, உண்மையான மாரடைப்பின் அறிகுறியாகத் தோன்றும் வலியோடு இணைந்துவிடுகிறது. மாரடைப்பு நோயில் பொதுவாக தலைச்சுற்றல், கிறுகிறுப்பு அல்லது மயக்கம் ஆகியவை காணப்படும்.

அடிக்கடி தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்பட்டால் உடனே இ.சி.ஜி. பரிசோதனை செய்வது நலம். தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் இவையே மாரடைப்பு நோயின் முதன்மை அபாய அறிகுறிகளாகப் பல நேரங்களில் அமைந்துவிடுகின்றன. பெரும்பாலும், இவை இதய இரத்த ஓட்டம் தொடர்பான அனைத்து நோய்களிலும், பிற பொதுவான நோய்களிலும் சாதாரணமாகக் காணப்படும் அறிகுறிகளாகும்.

மாரடைப்பின் இன்னொரு அறிகுறி, சாப்பிட்டவுடன் நெஞ்சில் ஏற்படும் ஓர் அசௌகிரியம். பெரும்பாலும், இத்தகைய நிலையை ஏதோ செரிமானச் கோளாறாகக் கருதி அறிகுறியை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். ஆனால், இந்த அறிகுறி ஏற்பட்ட நோயாளிகளுக்கு இ.சி.ஜி. பரிசோதனையைச் செய்யும்போது, இத்தகைய அறிகுறிகள் பலருக்கு இதய நோய் அதிலும் குறிப்பாக, மாரடைப்பு நோய் இருப்பதாகப் பல நேரங்களில் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, நடுத்தர வயதில் சாப்பிட பிறகு நெஞ்சில் வலி அல்லது பளு அழுத்துவது போன்ற உணர்வு நீண்ட காலமாக இருந்தால், அந்த அறிகுறிக்குப் போதிய முக்கியத்துவம் கொடுத்து, எது ஏன் என்பதைக் கண்டறியும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டும்.

இந்த நோய் அறிகுறி நரம்பு மண்டலம், ஜீரண உறுப்புகள், மன-உடல் தொடர்பு ஆகிய பல்வேறு துறை சார்ந்த நோய்களால் இருக்கலாம். இத்தகைய அறிகுறியில், மாரடைப்பு போன்ற நோயின் அபாயம் ஆரம்பமாகி இருப்பதையும் மறந்துவிடக் கூடாது.

மேல் மூச்சு வாங்குவது, மாரடைப்பு நோயின் இன்னொரு முக்கிய அறிகுறி, செங்குத்தான ஓர் இடத்துக்கு ஏறிச் செல்லுதல், படிக்கட்டுகளில் ஏறுதல், ஊர்தியைப் பிடிக்க ஓடிச்செல்லுதல் ஆகிய ஓரளவு கடின உழைப்பை ஆற்றும் நிலையில் மேல் மூச்சு வாங்குவது இயல்புதான்.

கொஞ்சம் அதிக உடல் உழைப்பு ஒருவருக்கு மேல் மூச்சு வாங்கும் நிறைய ஏற்படுத்தும் என்றால், அவர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமான ஒன்றாகும். இவ்வாறு மேல் மூச்சு வாங்குவது சில விநாடி, சில மணித் துணிகளுக்கு மேல் தொடர்ந்து இருந்தால், இதயத்தையும் பிற உறுப்புகளையும் பரிசோதிக்கும் வரை அதிக உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது. சில நேரங்களில், ஆஸ்துமா நோயாளிக்கு இழுப்பதைப் போன்று மேல் மூச்சு வாங்கினால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

நெஞ்சில் தோன்றும் வலி, மாரடைப்பு நோயின் பிரதான அடிப்படையான முக்கிய அறிகுறியாகும். நெஞ்சு வலி என்று சொல்லும்போது, நெஞ்சின் மேல் பகுதியில் தோன்றும் வலிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், இடது மற்றும் வலது கைகளில் தோன்றும் அல்லது சாப்பிட பிறகு நெஞ்சின் மத்தியில் தோன்றும் வலி ஆகியவற்றை மனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வகையான வலிகளை மிக லேசாகக் கருதக் கூடாது. ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருப்பவர்களுக்கு இத்தகைய வலி வராது. ஆகவே, ஒருவருக்கு வலி தோன்றுகிறது என்றால், ஏதோ ஒரு தவறு நிகழப்போவதின் அபாய அறிவிப்பாகவே கருத வேண்டும்.

மாரடைப்பின் போது உணர்விழத்தல், மார்பில் படபடப்பு போன்றவையும் நிகழக்கூடும். ரத்த சோகை, உணர்ச்சி வயப்படுதல் போன்ற பிற காரணங்களாலும், இதய நோயின்றி உணர்விழக்கும் நிலை உருவாகலாம். மார்பு படபடப்பு, இதய நோயின் அறிகுறியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இந்த இரண்டு அறிகுறிகளும் என்ன காரணத்தால் ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here