Home Love Part காதல் பாகம் – 77

காதல் பாகம் – 77

326
0
SHARE

காதல் முதல் நாள் சந்திப்பில் செய்யக்கூடாதவை

முதல்நாள் சந்திப்பு என்பதுதான் என்றென்றும் மறக்க முடியாத இனிமையாக அமையக்கூடியது.  மேலும் முதல் சந்திப்புகளில் மனத்தில் ஏற்படும் உருவம் மற்றும் உணர்வுகள்தான் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியவை.  அதனால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாகிறது.

அதனால் என்னவெல்லாம் செய்யக்கூடாது போதும். பெரும்பாலானவர்கள் என்று தன்னைப் பற்றியே வாய் ஓயாமல் பேசுவார்கள்.  இது தவறு.  ஏதேதோ ஆசை மற்றும் கனவுகளுடன் வந்திருப்பவர்களின் கருத்துக்கும் காது கொடுங்கள்.  இல்லவிட்டால் அவர்கள் பேசமுடியாமல் ஏமாந்துபோவார்கள்.

முதல் நாள் சந்திப்பில் ஜாதி, மதம், அரசியல் போன்றவற்றை பேசவே பேசாதீர்கள்.  நீங்கள் ஏதாவது ஒன்றின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருக்கலாம்.  ஆனால் அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை எனும்போது அது பெரும் ஏமாற்றமாகத் தெரியும்.  ஆனால் வாழ்வுக்கு எந்த வகையிலும் சம்பந்தப்படாத ஜாதி, மதம், அரசியல் ஆகியவற்றை பேசவே பேசாதீர்கள்.

நீங்கள் பார்க்கும் வேளையில் நிறைய சிக்கல்கள், பிரச்சனைகள் இருக்கலாம்.  அதைப் பற்றியெல்லாம் முதல்நாளே பேச வேண்டியதில்லை.  வேலை நிரந்தரமில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் முதல் சந்திப்பே இறுதி சந்திப்பாக மாறிவிடும்.

அதிகமான நபர்கள் செய்யும் தவறு என்பது, பழைய உறவுகளைப் பற்றி பேசுவதுதான்.  இதை நீங்கள் பேசாதீர்கள்.  சின்ன வயசுக் காதல் உறவுகளுக்குள் உண்டான காதல் என எத்தனையோ பழைய வாழ்வில் நடந்திருக்கலாம். அதையெல்லாம் உண்மையைச் சொல்கிறேன் என்று முதல்நாளே சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நிறைய பேருக்கு பேசுவதில் இருக்கும் ஆர்வம் கேட்பதில் இருப்பதில்லை.  இதை நீங்கள் செய்ய வேண்டாம்.  பிரியமானவர் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கேட்பதில் தவறேயில்லை.

முதல் நாள் சந்திப்புக்கு போதிய நேரம் ஒதுக்க மறுக்கக்கூடாது.  பேசுவதற்கு நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்புவது என்பது சந்திப்பு தோல்வியடைந்ததாகவே கருதப்படும்.

எல்லாவற்றையும் விடப் பெரிய குற்றம், சந்திப்புக்கு லேட்டாகச் செல்வது.  என்ன நேரத்தில் சந்திப்பு நடக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தீர்களோ அதற்கு குறைந்தது அரை மணி நேரம் முன்னதாக சென்று காத்திருப்பதுதான் காதலுக்கு அழகு.

எந்தக் காரணம் கொண்டும் செக்ஸ் பற்றி  பேசவோ, கேட்கவோ வேண்டாம்.  முதல்நாளே தொட முயற்சிப்பது, முத்தம் தர விரும்புவது, முதல் இரவு பற்றி பேசுவது எல்லாமே ஆபத்தாக மாறிவிடும்.

நாகரீகமின்றி நடந்துகொள்ள வேண்டாம்.  அதாவது சாப்பிடுவதை அசிங்கமாக செய்வது, கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், சாதாரணமாக கெட்ட வார்த்தைகள் பேசுதல் போன்ற விஷயங்கள் முதல்நாளே காதலை முறிய வைத்துவிடும்.

விரும்புபவரின் உறவினர், நட்புகளை கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் அவமரியாதை செய்வது முதல் நாள் சந்திப்பில் வேண்டவே வேண்டாம்.  இது உங்களைப் பற்றி அவர் கொண்டுள்ள எண்ணத்தை மாற்றிவிடும்.

முதல் சந்திப்பிலேயே எத்தனை குழந்தைகள் பேச வேண்டும். திருமணம் எங்கே வைத்துக்கொள்ளலாம், ஹனிமூன் எங்கே போகலாம் என்பது போன்ற விஷயங்களைப் பேசுவது வேண்டாம்.  இவை மோசமான விளைவுகளைக் கொடுத்துவிடும்.  அதுபோல் ஏராளமான கேள்விகள் கேட்கவும் கூடாது.

எவ்வளவு பணம் இருக்கிறது? எத்தனை நகைகள் உள்ளன? கழுத்தில் போட்டிருப்பது ஒரிஜினல் நகையா அல்லது கவரிங் நகையா போன்ற விஷயங்கள் எல்லாம் பேசுவது, நீங்களே காதலை முறித்துக்கொள்வதற்கு சமம்.

நீங்கள் சந்திப்புக்கு அழைத்ததும் உங்களை நம்பி வந்தமைக்கு நன்றி சொல்ல மறந்துவிடாதீர்கள்.

மரியாதையின்றி பேசாதீர்கள்.  மரியாதையை கொடுத்துப் பேசுவது மிக முக்கியம். பார்த்தல், பேசுதல் போன்ற நிலையில் அதாவது தள்ளி நிற்கும்போது கொடுத்த மரியாதையை நேரில் அருகில் இருந்து பேசும்போதும் கொடுக்க வேண்டியது மிக அவசியம்.  உங்களுக்கு உறுதியவராகிவிட்டார் என்று முதல் நாளே ஒருமையில் அழைத்துக்கொள்வது தவறாகும்.  இவ்வாறு செய்தல் கண்டிப்பா உறவு முறிந்துவிடும்.

எப்படி பேச்சை  வளர்ப்பது என்று தெரியாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பது அல்லது சுமாரான ஜோக் சொன்னால் சிரிக்காமல் அடம்பிடிப்பது, சந்திக்கும் இடம் வசதியாக உள்ளதா என்பதை கவனிக்காமல் தொடர்ந்து அங்கேயே இருப்பதும் ஆபத்துதான்.

நாம் இதுவரை செய்யக்கூடாது என சொல்லப்பட்ட விஷயங்களை கவனமாகக் கையாண்டு வந்தாலே போதும், முதல் சந்திப்பு என்பது இனிமையான அனுபவமாகிவிடும்.

சந்திப்பின்போது நீங்கள் பேசிய வார்த்தைகள், நகைச்சுவையாக, வித்தியாசமாக இருப்பது மிகவும் நல்லது.  அதாவது சந்திப்புகள் நடந்து முடிந்த பின்னரும் நினைத்துப் பார்த்து சந்தோஷமான அனுபவமாக முதல் சந்திப்பு இருக்க வேண்டும். பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கலாம்.  அதனால் அடுத்த நாளே மீண்டும் சந்திப்பு நடத்துவது அபத்தமானது.  நடைபெற்ற விஷயங்களையெல்லாம் மனத்தில் அசைபோட்டு, காதல் பற்றி எடுத்த முடிவு நல்ல முடிவுதானா என்பதை முடிவு செய்து தொடர்வதற்கு குறைந்தது ஒரு வாரமாவது டயம் தர வேண்டியது முக்கியமாகும்.

அடுத்தடுத்த சந்திப்புகள் என்பது சகஜமான ஒன்றாகிவிடும் என்பதால், முதல் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து மீண்டும் சந்திப்போம் என்று கூறிப் பிரிந்தால், காதலின் ருசியை நன்றாக உணர முடியும்.  அந்தக் காலகட்டங்களில் சிறுசிறு வார்த்தைகளுடன் மட்டுமே பேசவோ அல்லது பேசாமலோகூட இருக்கலாம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here