Home pregnancy குழந்தைப்பேறு 

குழந்தைப்பேறு 

276
0
SHARE

பெண்கள் கருவாக்கப் பிரச்னைகள், தீர்வுகள் 

மருத்துவத் தகவல்களைச் சேகரித்துத் தருதல் 

நோய்கள் 

ண்ணற்ற நோய்களும், கருத்தரிப்புத் திறனைக் குறைக்கும். பால்வினை நோய்களான கொனேரியா, கிளாமிடியா, சிபிலிஸ், யூரியாப்ளாஸ்மா தொற்று, இடுப்புக்கூட்டில் ஏற்படும் அழற்சி போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

இந்த நோய்கள், கருப்பையில் வடுக்களையும், கருப்பைக் குழாய்களில் அடைப்பையும் உண்டாக்கும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் பெரிய வடுக்களையும் உண்டாக்கும்.

பலர், வலது பக்க விலாவின் கீழ்ப் பகுதியில் வலி இருப்பதாகவும், பித்தப்பை பிரச்னையாக இருக்கும் என்றும் சிகிச்சைக்கு வருவார்கள்.

பரிசோதித்துப் பார்த்தால், இடுப்புக்கூட்டில் ஏற்பட்ட அழற்சியால் ஏற்பட்ட வடுக்களால், பித்தப்பை பாதிப்பு வந்திருப்பதைப் போன்ற அறிகுறிகள் இருக்கும். வடுத் திசுக்களால், கருக்குழாயில் அடைப்பும் உறுத்தலும் ஏற்பட்டிருக்கும். இந்தப் பகுதிகளில் வரும் பாதிப்புகளை அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்யலாம்.

மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றாலும் கருவாக்கத் திறன் பாதிக்கப்படும். கல்லீரலும், சிறுநீரகமும் உடலில் இருந்து கழிவுகளையும், நச்சுப் பொருள்களையும், ரத்தக் கழிவுகளையும் நீக்கும். தொடர்ச்சியாக கழிவுகள் தேங்கி, நீக்கப்படாத நிலை இருந்தால், ஹார்மோன்களால் மாதவிலக்குக் கோளாறுகள் உண்டாகி, கருத்தரிப்பைத் தடை செய்திருக்கும். இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்தால் கருத்தரிப்பு நிகழும்.

தைராய்டு சுரப்பியில் பிரச்னை இருந்தாலும் மலட்டுத் தன்மை உண்டாகும். அதிகமான தைராய்டு சுரப்பு இருக்கும் போது ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி வேகமாகப் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஈஸ்ட்ரோஜென் இல்லாமல் முட்டை வெளியாகாது. தைராய்டு குறைவாகச் சுரக்கும்போது, ரத்தத்தில் அதிகமான ஈஸ்ட்ரோஜென் இருக்கும். இதனால், புரோலாக்டின் அளவு அதிகரித்துவிடும். இந்த இரண்டும் அதிகமாக இருந்தால் சினைப்பைகள் சரியாக வேலை செய்யாது.

தைராய்டு சுரப்பியில் உள்ள குறைபாட்டைக் கண்டுபிடித்து, அறுவைச் சிகிச்சையின் மூலம் சரிசெய்து ஹார்மோன் சுரப்பைச் சீரமைத்தால் அது இயல்பாகச் செயல்படும்.

இளம் வயதில் வரும் சர்க்கரை நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பினால், இயல்பான மாதவிலக்குச் சுழற்சியில் பிரச்னை ஏற்படும். அதிக அளவில் சுரந்துள்ள இன்சுலின், சினைப்பையைத் தூண்டி ஆன்ட்ரோஜென் ஹார்மோனைச் சுரக்க வைக்கும். இது, முட்டை வெளியாவதைத் தடுத்துவிடும்.

ரத்தக் கொதிப்புக்கும் அட்ரீனல் சுரப்பிப் பாதிப்புக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. இதனால், ஆண் ஹார்மோன் அதிகமாகச் சுரந்து சினைப்பையின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும். பெண் தன்மையையும் மாற்றும். இந்தப் பிரச்னை உள்ள பெண்ணின் முகத்தில் முடி முளைத்தல், முகத்தில் எண்ணெய்ப் பிசுபிசுப்பு, கொழுப்புக் கட்டிகள் போன்றவை இருக்கும். ரத்தப் பரிசோதனை செய்தால், அட்ரீனல் சுரப்பி இயல்புக்கும் அதிகமாகச் சுரப்பது தெரியும். சிகிச்சை கொடுத்து ஆன்ட்ரோஜென் ஹார்மோனைக் கட்டுப்படுத்தினால், மாதவிலக்கு சீராகும். முகத்தில் முடி முளைப்பதும், வளர்வதும் கட்டுக்குள் வரும்.

ஆகவே, கருவாக்கச் சிகிச்சைக்கு வருபவர்கள், ஏதேனும் நோய்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது அவசியம்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here