Home Common Health Problems மணிக்கட்டுக் குகை நோய்க்குறித்தொகுதி

    மணிக்கட்டுக் குகை நோய்க்குறித்தொகுதி

    275
    0
    SHARE

    விரல்களை மடக்கும் தசைநாண்களும், முக்கியமான நரம்புகளும் குறுகிய மணிக்கட்டுத் திசுக்குகை வழியாகச் சென்று விரல்களை அடைகின்றன. இந்தத் திசுக்குகைகளில் வீக்கம் ஏற்பட்டாலோ, அழுத்தம் ஏற்பட்டாலோ நரம்புகள் நசுங்கும் அறிகுறிகள் ஏற்படும். பல நேரங்களில் இது ஏன் ஏற்படுகிறது என அறிய முடிவதில்லை. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதிக எடை உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் அதிகம் ஏற்படுகிறது. புகைபிடித்தல் மற்றும் நீரிழிவு, தைராய்டு நோய்கள், மூட்டழற்சி நோய்களின்போதும் இந்நோய் ஏற்படுகிறது. சில குறிப்பிட்ட வேலைகளின்போது மணிக்கட்டை ஒரே மாதிரி வைத்திருக்க நேர்வதாலும், முறையற்ற விதத்தில் எடைகளைத் தூக்குவதாலும்கூட இது ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    உங்கள் கட்டைவிரல், சுட்டுவிரல், நடுவிரல்களில் மரமரப்பும், துடிப்பது போன்ற உணர்வும் ஏற்படும். ஆனால் சுண்டு விரலில் இராது. இந்தக் குறிகள் இரவு நேரத்தில் மிகுந்து உங்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்யும். இதே உணர்வுகள் வாகனம் ஓட்டும்போது, தொலைபேசியைப் பிடித்துப் பேசும்போது, செய்தித்தாள் படிக்கும்போது ஏற்படலாம்.

    வலி உங்கள் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து பரவி முன்கைகளுக்கும் கீழிறங்கி, உள்ளங்கை விரல்களுக்கும் பரவும்.

    கைகளில் தளர்வு போன்ற உணர்வு, வலுக்குறைவு, எடுத்த பொருள்களைக் கீழே போடுதல் போன்றவை ஏற்படலாம்.

    நோய் முற்றும்போது விரல்களை இழந்த உணர்வு ஏற்படலாம்.

    தன்கவனிப்பு:
    திரும்பத் திரும்பச் செய்யவேண்டிய கடுமையான வேலைகளைச் செய்யும்போது ஒரு மணிநேரத்திற்கு 5 நிமிடங்களாவது ஓய்வு எடுங்கள்.

    பணியினை மாற்றி, கைகளுக்கும், மாணிக்கட்டுகளுக்கும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது தளர்வுப் பயிற்சி செய்யுங்கள்.

    உடலை நன்கு பராமரியுங்கள். உடல் எடையைக் கவனத்துடன் சரியாக வைத்துக்கொள்ளுங்கள். புகைபிடிக்காதீர்கள்.

    உங்கள் விரல்கள், கைகளில் வலி, மரமரப்பு ஏற்பட்டு அது உங்கள் உறக்கத்தைப் பாதித்தால் அல்லது காலையில் எழுந்ததும் கைகளில் வலியும், மரமரப்பும் ஏற்பட்டால் இரவில் மணிக்கட்டுப் பாதுகாப்பு வளையம் அணியுங்கள். இப்பாதுகாப்பு வளையம் தளர்வாக இருக்கட்டும், இறுக்கமாக இருக்க வேண்டாம்.

    அறிகுறிகள் தொடர்ந்து கடுமையாக அதிகரித்தால் உடன் மருத்துவரை அணுகவும்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here