Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

370
0
SHARE

கருத்தடை முறைகள் 

பெண்களுக்கான சாதனங்கள் 

பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கது ஹார்மோன்கள். இவை ஊசி மற்றும் மாத்திரை வடிவில் கிடைக்கின்றன. இவற்றை எல்லா பெண்களுமே பயன்படுத்த இயலாது. புற்றுநோய், இரத்த உறைவு நோயுள்ளவர்கள், இதய பாதிப்புள்ளவர்கள், மிகை ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் பாதிப்புள்ளவர்கள், ஒற்றைத் தலைவலி நோயாளிகள் ஆகியோர் ஹார்மோன் மாத்திரை பயன்படுத்தும்போது, அவர்களின் பாதிப்பு தீவிரமாகும்.

இந்த மாத்திரைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

மாதவிலக்கான ஐந்தாவது நாள் முதல் தொடர்ந்து 23 நாட்களுக்கு தினம் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அடுத்த ஐந்து நாட்கள்வரை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அடுத்த மாதவிலக்கான ஐந்து நாட்கள் கழித்து தொடர்ந்து மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த மாத்திரைகளை சாப்பிடும்போது கருமுட்டைகள் வெளிப்படாது. இதனால் விந்தணுக்களால் கருத்தரிப்பை நிகழ்த்த இயலாது.

ஹார்மோன் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் வரலாம். மாதவிலக்கான சமயத்தில் மனச்சோர்வு, மன இறுக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. ஹார்மோன் மாத்திரைகளை இந்தக் காலத்தில் பயன்படுத்தினால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதை நடுவில் நிறுத்தினால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகும். நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தினால் இரத்த நாளங்களில் இரத்த உறைவு, மார்பகப் புற்றுநோய் ஆகியவையும்  வருவதாகத் தெரியவந்துள்ளது.

ஊசி மூலம் ஹார்மோன் மருந்துகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும். முறையாக போட்டுக்கொள்ளாவிட்டால் கருத்தடை சாதனம் பலனளிக்காது. தவிர, ஊசி மூலம் ஹார்மோன் செலுத்திக் கொள்வது புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என்பதால் அரசும் இதை அனுமதிப்பதில்லை. பெண்களுக்கான கருத்தடை சாதனங்களில் ஐயுடி எனப்படும் பிறப்புறுப்புக்குள் செலுத்தும் கருத்தடை சாதனம் உள்ளது. லூப் எனப்படும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக்கொள்ள வேண்டும். இதன் மேற்பக்கமாக ஒரு சிறிய நுனி விடப்பட்டிருக்கும். தேவையில்லாதபோது இவற்றை நீக்கிக்கொள்ளலாம்.

பாலைவனப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்களின் ஒட்டகம் கருத்தரித்தால் தொழில் சிறப்பாக நடக்காது எனக் கருதி, ஒட்டகம் கருத்தரிக்காமலிருக்க வாதுமைக் கொட்டைகளை ஒட்டகத்தின் பிறப்புறுப்புக்குள் வைத்துவிடுவார்கள்.

இதேபோல பெண்களின் கருவுறுதலை தடுப்பதற்காக ஆங்கில ‘டி’ வடிவிலான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்துகிறார்கள். தாமிர உலோகத்தாலான இதை காப்பர்-டி என்கிறார்கள். இது கருப்பைக் குழாய்களை அடைத்துக் கொள்வதால் எந்தச் சூழலிலும் கருவானது கருப்பைச் சுவரில் பதியமாகாது.

காப்பர்- டியைப் பயன்படுத்தும்போது 80% அளவுக்கு கருவுறும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.

இவ்வாறு ‘டயபிராம்’ என்ற முட்டை வடிவ உறையைப் பயன்படுத்துகிறார்கள். இதில் உயிரணுக்களைக் கொல்லும் மருந்துப்பொருட்கள் தடவப்பட்டிருக்கும். எல்லாருக்கும்  ஒரே அளவில் பெண்ணுறுப்பு இருப்பதில்லை, இதனால் சரியான அளவில் தேர்ந்தெடுத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்தாவிட்டால் கருத்தரிப்பை தவிர்க்க இயலாது. சிறிய இடைவெளியிருந்தாலும் அதன் வழியே உயிரணுக்கள் நுழைந்து கருத்தரிப்பை ஏற்படுத்திவிடும்.

இதைத்தவிர, கருப்பையின் வாய்ப்பகுதியை மூடிவிடும் கருத்தடை சாதனமும் உள்ளது. மிக மலிவான, வாழ்நாள் முழுவதும்கூட நீடிக்கிற கருத்தடை சாதனம் இது. கருப்பைக் கழுத்தின் வடிவத்தைப் போல செய்யப்பட்டுள்ள இந்தச் சாதனத்தை கருப்பையின் கழுத்துப் பகுதியில் பொருத்தி விடுவார்கள். இது பக்கவிளைவுகள் எதுவும் இல்லாதது.

கருத்தடை சாதனங்களை கருவுறுதல் நிகழ்வதை தவிர்ப்பதற்காக மட்டுமின்றி, பாலுறவின்போது நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

விடலைப் பருவத்தின் போது பல இணையர்களை (பார்ட்னர்கள்) ஏற்படுத்திக்கொள்வதும், முன் பின் தெரியாத நபர்களுடன் பாலுறவு கொள்வதும் பல்வேறு பிரச்னைகள் உண்டாக வழிவகுக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதும், கண்ணியமான திருமண பந்தத்திற்குள் நுழைந்த பின் ஒருதார முறைப்படி வாழ்வதும் நோய்கள் உண்டாகாமல் தடுக்கும் வழியாகும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here