Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 40

உறவுகள் சிறகுகள் – பாகம் – 40

197
0
SHARE

த்தனை அன்யோன்யமான தம்பதிக்குள்ளும் பிளவையும் பிரிவையும் ஏற்படுத்தக்கூடியது பணம். பணத்தைச் செலவு செய்கிறவருக்கு,அதற்கான காரணமும் அது குறித்த நியாயமும் இருக்கும்.பணத்தை மிச்சப்படுத்த நினைப்பவருக்கும் அது குறித்த ஒரு காரணமும் நியாயமும் இருக்கும்.இந்த இரண்டையும் தாண்டி,யதார்த்தம் என்கிற மூன்றாவது தரப்பு ஒன்று உண்டு.அதன்பார்வையில் இந்த விஷயத்தைப் பார்த்தால் முதல் இரு தரப்பு காரணங்களும் நியாயங்களும் அர்த்தமற்றவையாகத் தெரியலாம். மொத்தத்தில் இந்த மூன்று கோணங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பே இருக்காது. திருமண வாழ்வில் பணம் என்பது 3 பக்கப் புதிர் மாதிரியானது. அதில் எந்தப் தரப்பில் உண்மை என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது.

பெரும்பாலான திருமண உறவுகளில் பிரச்னை ஏற்படக் காரணமே பணம்தான். சம்பாதிக்கிறவருக்கும் செலவு செய்பவருக்கும் இடையிலான சண்டை தவிர்க்க முடியாதது.

அதிலும் அதிகம் செலவழிக்கிற ஒருவர்,பார்த்துப் பார்த்து செலவழிக்கிற ஒருவரைத் திருமணம் செய்தால்,அவர்களுக் கிடையில் பிரச்னைகளும் சண்டைகளும் தொடர்கதையாகவே இருக்கும்.

கணவன் மனைவி இருவரில் ஒருவர், பணத்தை அனாவசிய விஷயங்களுக்கு செலவழிக்காமல்,ஒய்வு காலத்துக்காக சேமித்து வைக்க நினைக்கலாம். இன்னோருவரோ நிகழ்கால சந்தோஷத்துக்காக நினைத்தபடி செலவழிக்க நினைக்கலாம்.

ஒருவர்,குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு பணம் தேவைப்படும் என நினைக்கலாம்.இன்னோருவரோ அவர்கள் வளர்ந்து,சம்பாதித்துத் தாமாக சேர்த்துக்கொள்ளட்டும் என நினைக்கலாம்.

ஒருவர் கடன் வாங்குவது மிகப்பெரிய தவறு என நினைக்கலாம்.இன்னோருவரோ கடன் வாங்கி சமாளிப்பதன் மூலம் வரியை மிச்சப்படுத்தலாம் எனக் கணக்கு போடலாம். இப்படி பணம் பற்றிய பேச்சிலும் அணுகுமுறையிலும் எப்போதும் முரண்பாடுகளைத் தவிர்க்க முடியாது.

‘பணம் பத்தும் செய்யும்… பாதாளம் வரை பாயும்’ என்றெல்லாம் சும்மாவா சொன்னார்கள்  ?பணத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாவிட்டால், அது இன்னும் என்னென்னவோ விளைவுகளைக்கூட ஏற்படுத்தும்.

இதற்கு என்ன செய்யலாம்?

சம்பாதிக்கிறவருக்கும் சரி,செலவழிக்கிறவருக்கும் சரி…தான் செய்வதுதான் சரி என்கிற நினைப்பே மேலோங்கி இருக்கும். அது தவறு.அடுத்தவர்களது தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

கணவன் – மனைவி இருவரும் பணத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசலாம். இருவரின் குடும்பப் பின்னணியிலும் பணத்தைக் கையாண்ட விதமும் பாரம்பரியமும் வேறு வேறாக இருந்திருக்கும். தெரிந்தோ, தெரியாமலோ இருவரும் திருமணத்துக்குப் பிறகும் அதையே பின்பற்றிக் கொண்டிருப்பார்கள். அதைப் பேசித் தீர்ப்பதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

பணத்தைப் பற்றிய கடந்த கால கசப்பான அனுபவங்களும், அதன் மீதான பார்வையிலும்,செலவழிக்கிற முறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இருவரும் வெளிப்படையாக பேசுவதன் மூலம் அந்தத் தாக்கத்திலிருந்து வெளியே வரலாம்.

பொருளாதாரம் குறித்து அண்மைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களை இருவரும் சேர்ந்து தயாரிக்கலாம்.

இத்தகைய வெளிப்படையான விவாதத்தில்,பணத்தைப் பற்றி அத்தனை நாள் இருவரும் அறியாத பல பார்வைகள்,கருத்துகள்,இருவருக்குமிடையிலான வேற்றுமைகள் எல்லாம் தெரியவரும்.இருவரும் இணக்கமாக ஒரு முடிவுக்கு வரவும் உதவியாக இருக்கும்.

பல நேரங்களில் விவாகரத்துக்கான மூலகாரணமாக அமைகிற அளவுக்கு பணம் திருமண உறவில் பெரும்பங்கு வகிக்கிறது.ஆங்கிலத்தில் ‘கம்பல்சிவ் ஸ்பெண்டர்’ என்பார்கள். அதாவது செலவழிக்காமல் இருக்கவே முடியாத நிலை! இன்பமோ,துன்பமோ எப்படிப்பட்ட மனநிலைக்கும் ஷாப்பிங் செய்வார்கள். அப்படி அவர்கள் வாங்கிக் குவிக்கிற பலதும் உண்மையில் அவர்களுக்குத் தேவையே படாதவையாக இருக்கும். இதை எப்படிச் சரி செய்வது?

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். கையில் பணத்தை வைத்துக்கொண்டு எண்ணி எண்ணி செலவுசெய்கிற போதுதான் அதன் உண்மையான மதிப்பு தெரியும்.பிளாஸ்டிக் அட்டையைத் தேய்க்கிறபோது அது பெரிய விஷயமாகத் தெரியாது.

ஒற்றை ரூபாயை செலவழித்தாலும் கணக்கு எழுதி வைக்கிற பழக்கத்தை இருவரும் வளர்த்துக்கொள்ளவேண்டும். மாதக்கடைசியில் அதை எடுத்துப் பார்த்தால் என்ன வாங்கினோம்,எதற்கு வாங்கினோம், அவற்றில் எவையெல்லாம் தேவையில்லாதவை எனத் தெரியும்.இருவரில் யார் தவறாக செலவு செய்கிறார்கள் என்றும் அந்தக் கணக்கு காட்டிக் கொடுக்கும்.

தேவையே இல்லாமல் அதிக செலவு செய்வது எப்படித் தவறானதோ,அதைவிடத் தவறானது தேவைக்குக் கூட செலவழிக்க யோசிப்பது.

வறுமைக் கோட்டிலிருந்து மெல்ல மெல்ல உயர்ந்து மேலே வந்த கணவனுக்கோ,மனைவிக்கோ,பணம் என்பது வெறும் காகிதமாகத் தெரியாது.அதனுடன் அவர்களுக்கு உணர்வு ரீதியான ஒரு பிணைப்பு இருக்கும். ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்து. பல முறை யோசித்தே செலவழிப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு வாழ்க்கைத் துணையாக வருபவரின் நிலை சற்றே சிக்கலானதுதான்.அவசியத்துக்குக்கூட செலவழிக்காத துணையின் மனோபாவம் எரிச்சலைக் கிளப்பலாம்.விரக்தியைக் கொடுக்கலாம்.

பணத்தைக் கையாள்வதில் மேற்சொன்ன வழிகள் பலனளிக்காத பட்சத்தில்,உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மன மாற்றத்துக்கு உதவும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பணம் என்பது ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் தீர்மானிக்கிற விஷயமாகவும் இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.தம்பதியரின் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கிற வீடுகளிலும் சம்பாதிக்காத துணை,அந்த ஒற்றை சம்பாத்தியத்தை சரியாகக் கையாளாமல்,கண்டபடி செலவு செய்கிற வீடுகளிலும் கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிற வீடுகளிலும் பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது பணம்.

இதை எப்படித் தவிர்க்கலாம் ?

பணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை என்பது நம் நாட்டில் ஆரோக்கியமான விஷயமாகக் கருதப்படுவதில்லை.அந்த மனத்தடையைத் தகர்த்தெறிந்து,தம்பதி இருவரும் அவ்வப்போது பொருளாதார நிர்வாகம் பற்றிப் பேச வேண்டியது முதல் தீர்வு.

சம்பாதிக்கிற நபர் உயந்தவர்,சம்பாதிக்காதவர் தாழ்ந்தவர் என்கிற வேற்றுமை மனோபாவம் கூடாது.யார் என்ன வேலை பார்த்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்கிற மனநிலை வேண்டும்.

செலவழிக்கிற அதிகாரமானது சம்பாதிக்கிற நபரின் கைகளில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல், அது இருவருக்குமான பொது உரிமை என்றாக்கப்பட வேண்டும்.

சொத்து வாங்குவதென்றால் இருவரின் பெயரிலும் வாங்குவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here