Home pregnancy குழந்தைப்பேறு 

குழந்தைப்பேறு 

307
0
SHARE

மாதவிலக்குப் பிரச்னைகளை  கண்டறிதல் 

 

மாதவிலக்கு ஒழுங்காக இல்லை என்ற பிரச்னையோடு வரும் பெண்களிடம், நான் இரண்டு  கேள்விகள் கேட்பது உண்டு.

‘உங்களுக்கு மாதவிலக்கு ஆகிறதா?’

‘முட்டை வெளியாகிறதா?’

இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால், அவர்களின் கருவாக்கப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை நான் ஓரளவு கணித்துவிடுவேன்.

இந்த கேள்விகள் மட்டுமல்ல, அவ்வப்போது வேறு சில கேள்விகளும் கேட்பது உண்டு. இவை அனைத்துமே, அவர்களின் கருவாக்கத் திறனை மேம்படுத்தி, கூடுமானவரை நவீன சிகிச்சைகளான சோதனைக் குழாய் போன்ற சிகிச்சைகள் இன்றி இயல்பாகக் கருத்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு உதவும்.

மாதவிலக்கை உண்டாக்குவது எது?

ஒவ்வொரு மாதமும் ஈஸ்ட்ரோஜெனும் புரொஜெஸ்டீரானும் கருப்பைச் சுவரைத் தூண்டுகின்றன. புரொஜெஸ்டீரானை உண்டாக்கும் கார்பஸ் லூட்டியம், மாதவிலக்கின் முடிவில் உதிர்ந்துவிடுகிறது. புரொஜெஸ்டீரான் வித்ட்ராயல் ப்ளீட், அதாவது புரொஜெஸ்டீரானை நீங்கியதற்காக ரத்தப்போக்கு உண்டாகிறது.

கருப்பையின் சுவர்ப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள், அலை அலையாக ரத்தக்கசிவை உண்டாக்குவதால் தான் மாதவிலக்கு ஆகிறது. விலக்கின் முடிவில், ரத்த உறைவை உண்டாக்கும் பொருள்கள், ரத்தக்கசிவு உள்ள பகுதிகளை மூடிவிடுவதால் மாதவிலக்கு நின்றுவிடுகிறது. இதனால், ஈஸ்ட்ரொஜென் அடுத்த மாத சுழற்சியை ஆரம்பிப்பதற்க்காக, கருப்பைச் சுவரை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறது.

இவை இயல்பாக நடைபெறும் கருத்தரிப்புச் செயல்கள். இந்த வழக்கம் மாறுபாடாகத் தோன்றுவதற்கு என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்பதை அறிவதற்காகப் பல்வேறு பரிசோதனைகள் செய்வது அவசியம். அவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

துவக்கப் பரிசோதனைகள் 

உங்கள் மாதவிலக்கு இயல்புக்கு மாறாக இருப்பது ஏன் என்பதை அறிவதற்குப் பல்வேறு சோதனைகள் செய்வது அவசியம். அவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பப் பரிசோதனை 

என்னிடம் கருவாக்கச் சிகிச்சைக்காக வந்த முப்பத்தைந்து வயதுப் பெண்மணி, தொடர்ந்து மாதவிலக்கு ஆகி வந்ததாகவும், சமீபத்தில் அதுவும் நின்றுவிட்டதாகவும் தெரிவித்தார். அவருக்கு என்ன பயம் என்றால், மாதவிலக்கு குறிப்பிட்ட வயதுக்கு முன்பே நின்றுவிட்டால், அதன்பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதே என்பதுதான்.

அவரைப் பரிசோதித்தபோது, கர்ப்பம்  தரித்திருப்பதற்கான அறிகுறி அனைத்தும் இருந்தன. உண்மையிலேயே அவர் கர்ப்பம் தரித்திருந்தார். நான் இந்த விஷயத்தைச் சொன்னபோது, அவர் என்னை நம்பவே இல்லை. அவரை நம்ப வைப்பதற்காக, சில பரிசோதனைகள் செய்து விளக்கிய பிறகுதான் அவர் நம்பினார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

மாதவிலக்கு நிற்பதற்குத் தனிப்பெறும் காரணமாக இருப்பது கர்ப்பம்தான். கருவாக்கச் சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன், கர்ப்பப் பரிசோதனையைச் செய்துவிட்டால், கர்ப்பத்துக்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது தெரியவரும்.

தொடர்ச்சியாக இரண்டு மாதமாக விலக்கு நின்றுவிட்டது என்று யாராவது சொன்னால், கர்ப்பப் பரிசோதனையைச் செய்து பார்த்துவிடுவேன். அதற்கு மேலும் பல மாதங்களாக விலக்கு ஆகவில்லை என்றால், வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here