Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

189
0
SHARE

பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் 

என்னென்ன விஷயங்களைக் குழந்தைக்குச் சொல்லித் தரவேண்டும்?

அ. உடல் மற்றும் உணர்வு சார்ந்த விஷயங்களை சொல்லித்தரவேண்டும்

 

குழந்தையிடம் இது கை என்றோ, உன் கை எங்கிருக்கு காட்டு, மூக்கு எங்கிருக்கு காட்டு எனக் கேட்டு இதுதான் கை, இதுதான் மூக்கு என அதற்கு புரியவைக்கிறோம். அதே போல குழந்தை வளரவளர அதனுடைய உறுப்புகள், செயல் என ஒவ்வொன்றாக கற்றுத்தரவேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளை வளர்ப்பவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில்தான் பின்னாளில் குழந்தைகளை தின்பண்டங்களைக் காட்டி சில காமுகர்கள் சீரழிக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

அதேசமயம்,  பிறப்புறுப்பைத் தொடுவதெல்லாம் குழந்தைகளிடம் காணப்படும் இயல்பான செயல்கள். அந்தச் செயல்களுக்காக குழந்தையை கண்டிப்பது, தண்டிப்பது, அதட்டுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது. குழந்தையின் கவனத்தைத் திசைத்திருப்பி அந்த செய்கையை மாற்ற வேண்டும்.

இப்போதெல்லாம் பாலியல் சார்ந்த பல விவரங்கள் சிறுவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் தெரிந்துவிடுகிறது. முதலிரவு வரை அவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தைப் பற்றியோ, காட்சிகளைப் பற்றியோ அவர்கள் ஏதேனும் கேட்டால், ‘இந்த வயசில இப்படியொரு புத்தியா? என குழந்தையை அடிக்கப் பாயாமல், அதைப் பற்றி சொல்லிக்கொடுங்கள்.

அவர்கள் வளரட்டும், சொல்லித்தரலாம் என நீங்கள் காத்திருப்பீர்கள்; அதற்குள் அவர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது வேறு யார் மூலமாவது அந்தத் தகவல்களைத் தப்புத்தப்பாகத் தெரிந்துகொண்டு விடுவார்கள், இதனால் உங்கள் குழந்தையின் எதிர்காலம் சீரழிய வாய்ப்பிருக்கிறது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தையிடம் எதையும் சுருக்கமாக, அதற்குப் புரிவது போல சொல்லித் தாருங்கள். இதைப் போய் குழந்தையிடம் சொல்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்கக் கூடாது. இந்தத் தகவல்கள் எல்லாம் அவர்கள் மனதில் முழுமையாகப் படியவும் செய்யாது, தங்களுக்குப் புரியாத விவரங்களை அவர்கள் மறந்துவிடுவார்கள்.

ஒருமுறை இது இப்படித்தானா? என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஏற்பட்டுவிட்டால், மறுமுறை அதன் மீது அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். தன் மனதில் தோன்றும் எதைப் பற்றியும் தைரியமாகக் கேட்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்குங்கள்.

மற்றவர்களோடு எவ்வாறு ஒன்றி வாழ்வது என்பதைப் பற்றி குழந்தைகள் கற்றுக்கொள்ள அந்த உறவு முறையை பயன்படுத்துங்கள். அதேசமயம், அவர்களின் உடல் மற்றும் உள்ள நலனை வளர்ப்பதற்கு குழந்தைகளிடம் ஆசிரியர் மாணவர் போக்கு இருக்கக்கூடாது. நீங்கள் தோழனாக, தோழியாக மாறி சொல்லித்தரவேண்டும்.

விடலைப் பருவத்தைக் குழந்தை நெருங்கிவிட்டால், பெண்ணுக்கு மாதவிலக்காகும், மார்பகம் வளரும். இதையெல்லாம் அவர்கள் ஏதோ ஆபத்தானது எனவும், தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் நினைக்கத் தொடங்கி விடுவார்கள். இதைப்போக்க அவர்களுக்குப் பக்குவமாக, புரியும் விதத்தில் சொல்லிக்கொடுங்கள்.

விடலைப் பருவத்தில் பையனுக்கு உறுப்புகள் வளர ஆரம்பிக்கும்போது அதைப் பார்த்து அவன் மிரள்வதும், விந்து வெளியானால் பயந்துபோவதும் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்துகொண்டு அதைப்பற்றி சொல்லிக் கொடுங்கள். இதெல்லாம் தவறே கிடையாது என்பதில் நீங்கள் முதலில் தெளிவாக இருக்கவேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here