Home question and answer கேள்விகளும் பதில்களும்:

கேள்விகளும் பதில்களும்:

170
0
SHARE

எனக்கு நீரிழிவால் ஆழ்மயக்கம் ஏற்பட்டு அருகில் ஒருவரும் இல்லையெனில் என்னால் மீண்டு வர இயலுமா?
மிக அதிக இரத்த குளுகோஸாலோ மிகக் குறைந்த இரத்த குளுகோஸாலோ ஆழ்மயக்கம் ஏற்படலாம். எந்த உதவியும் இன்றி மனத் தெளிவு ஏற்படுதல் பல காரணங்களைப் பொறுத்ததாகும். அதாவது எந்த அளவு உங்கள் குளுகோஸ் அளவு அதிகம் அல்லது குறைவு, எவ்வளவு காலம் இந்த நிலை உள்ளது, நீங்கள் உணவருந்தி எவ்வளவு நேரம் ஆகிறது, நீங்கள் இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டு எவ்வளவு எனப் பல காரணங்கள் உள்ளன.
நீங்கள் தனியாக வசிக்க நேர்ந்தால் அடிக்கடி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ தொடர்புவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களிடம் இருந்து தொடர்பு வெகுநேரம் இல்லையெனில் அவர்களை உடன் தொடர்புகொள்ளச் சொல்லவும். இது சற்றுச் சிரமமான காரியம் போல் தோன்றினாலும் பலரும் உதவும் மனப்பான்மையுடன் உதவ முன்வருவார்கள் என நம்பலாம்.

என் மனைவிக்கு அடிக்கடி தாழ்குளுகோஸ் நிலை ஏற்படுகிறது. அவளுக்கு எப்போதாவது மயக்கம் ஏற்படுமோ? அப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மனைவிக்குத் தாழ்குளுகோஸ் காரணமாக ஆழ்மயக்கம் ஏற்பட்டால் உடன் குளுகோகான் ஊசி செலுத்துவதே நல்லது. இதுபற்றி நீங்கள் அதிக விவரம் தெரிந்துகொள்வது அவசியமாகும். குளுகோகான் ஊசி போட்டால் வாந்தி வரும் என்பதால் ஊசி போட்டதும் அவளைச் சற்று ஒருக்களித்துப் படுக்கச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவசர உதவி மையத்தினை நாடவும்.
மயக்கம் ஏற்படப் போவதற்குமுன் உள்ள நிலையில் நீங்கள் அவளைப் பார்த்தால், அதாவது மனக்குழப்பத்துடன் அவள் காணப்பட்டால் உடன் இனிப்புப் பானம் அல்லது ஆகாரம் ஏதேனும் பருகவோ உண்ணவோ கொடுக்க வேண்டும். ஆனால் மயங்கிய நிலையில் காணப்படுபவர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது. இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும். உணவு, பானம் கொடுத்த பிறகும் விளைவுகள் சரியாக இல்லாவிடில் குளுகோகான் ஊசி போடவும் அல்லது அவசர உதவி மையத்தை நாடவும்.

நீரழிவு உள்ளவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமா?
ஆம், நீரிழிவு உள்ளவர்களுக்கு இரத்த மிகையழுத்தம் மற்றும் மிகை கொலஸ்டிரால் காணப்படுவதால் இவை இரத்த நாளங்களைப் பாதித்து இதயத் திசுக்களுக்குப் பிராணவாயுக் குறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படலாம். இதுவன்றி நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது குறிப்பான அறிகுறிகள் ஏற்படாது போவதால் தான் உடன் மருத்துவ உதவியை அவர்கள் நாடாமல் இருக்கக்கூடும்.


நீரிழிவு உள்ள குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுமா?
வழக்கமாக ஏற்படுவதில்லை. எனினும் வகை 1 நீரிழிவு உள்ள குழந்தைகளுக்கு இது ஏற்படலாம். ஆனால் குழந்தைப் பருவத்தைத் தாண்டும் வரை ஏற்படுவதில்லை.

எனக்கு நீரிழிவு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் கண் பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமா?
வகை 2 நீரிழிவு உள்ளவர்களில் 30 சதம் பேர்களுக்கு நோய் கண்டுபிடிக்கப்படும்போது கண் பாதிப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. எனினும் ஆரம்பநிலைப் பாதிப்புகள் லேசானதுடன் பார்வைக் குறைவை ஏற்படுத்துவதில்லை. ஆனால் பின்னர் இவர்களுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படலாம். வகை 2 நீரிழிவைவிட வகை 1 நீரிழிவு உள்ளவர்களுக்கு நோய் கண்டுபிடிக்கப்படும்போது கண் பாதிப்புகள் காணப்படும். ஆனால் நோயின் காலத்தைப் பொறுத்து விழித்திரை வலுவிழப்பு ஏற்படும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here