Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 72

உறவுகள் சிறகுகள் – பாகம் – 72

429
0
SHARE

துணையினால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்குச் சுயமரியாதை குறையும். தான் எதற்கும் லாயக்கற்றவர், தன்னை நேசிக்க யாருமில்லை, தன் மீது யாரும் அன்பு காட்ட மாட்டார்கள் என நினைப்பார்கள். தான் அழகாக இல்லை, அதனால்தான் வேறொருவரை நாடிப் போயிருக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.

ஆனால், தகாத உறவைத் தேடிச் செல்கிற பலரும், அழகான, கவர்ச்சியான நபர்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வதில்லை. ஆராய்ந்து பார்த்தால் கணவன் அல்லது மனைவியைத் தாண்டி, உறவு வைத்துக் கொள்கிற அந்த மூன்றாம் நபர்,அழகு,கவர்ச்சி இல்லாதவராகவும் பருமானவராகவும் இருப்பது தெரியும். உடல் கவர்ச்சி,அழகு என்பதை எல்லாம் மீறி, இத்தகைய தகாத உறவுக்குள் இருவரை இணைப்பதில் வேறு காரணங்களே இருக்கின்றன.

துணையின் தகாத உறவு அறியப்படுவதற்கு முன்பு வரை, தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிகமாகவே இருப்பதையும், அந்த உறவு தெரிந்ததும் அது அப்படியே மாறுவதையும் கண்கூடாகப் பார்க்கலாம். தன்னை மனதளவில் மிகப் பலமானவராக,கவர்ச்சியானவராக, அழகானவராக,காதலிக்கத் தகுதியானவராக நினைத்துக்கொண்டிருப்பார்கள். துணைக்கு வேறு உறவு இருப்பது தெரிந்ததும், இந்த எண்ணங்கள் எல்லாமே நேர்மறையாக மாறும்.

உறவு வெட்ட வெளிச்சமாவதற்கு முன், துணையிடம் பேசிய விஷயங்கள், உறவு அம்பலமான பிறகு வேறு அர்த்தம் தரும். உதாரணத்துக்கு ‘ஏன் லேட்… எங்கே இருக்கீங்க ? ‘ என்கிற கேள்விகளுக்கு துணை சொன்ன பதில்களை உண்மை என நம்பியிருக்கலாம். எல்லாமே பொய்யாக இருக்குமே என எண்ண வைக்கும். துணையைச் சுற்றியுள்ள எல்லோர் மீதும் சந்தேகம் வரும். துணை செய்கிற சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட வேறு ஏதோ பின்புலம் இருக்குமே என சந்தேகப்பட வைக்கும். எது சரி, எது தவறு எனப் பிரித்துப் பார்க்க முடியாமல் எல்லவற்றின் மீதும் சந்தேகம் வரும்.

பாதிக்கப்பட்ட துணை தனக்குளேயே சில கேள்விகளைக் கேட்டுப் பார்த்து இந்த விஷயத்தில் தெளிவு பெறலாம்.
திருமணமான புதிதில் இருவரும் சேர்ந்து ஈடுபட்ட வேலைகளை எப்போதிலிருந்து தனித்தனியே செய்ய ஆரம்பித்தோம் ?

ஓய்வு நேரங்களில் சேர்ந்திருக்கும் போதும், தனித்தனியே ஷாப்பிங் செய்வதும், வெளியே போவதும் எப்போதிலிருந்து ஆரம்பமானது?

இருவருக்கும் இடையில் நேரமே இல்லை என்கிற நிலை எப்போது உருவானது ?

கணவன் – மனைவி தனிமையில் இருந்த தருணங்கள் மகிழ்ச்சியைத் தந்தது போக, தனிமைத் தருணங்களில் பக்கத்தில் குழந்தைகளோ, வேறு யாருமே இல்லாதது உறுத்தலான உணர்வைக் கொடுக்க ஆரம்பித்தது எப்போது முதல் ?
கணவன் மனைவியிடமோ,மனைவி கணவனிடமோ கேட்ட கேள்விகளுக்கு தெளிவற்ற,குழப்பமான பதில்கள் வரத் தொடங்கியது எப்போதிலிருந்து?

துணையின் பேச்சில் எது உண்மை, எது பொய் என்கிற குழப்பம் எப்போது ஆரம்பமானது ?
சின்னச் சின்ன சண்டைகள் வந்த போது, அவற்றைத் தீர்க்க முனையாமல் அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தது எப்போதிலிருந்து ?

காதலர் தினம், திருமண நாள் என ஒவ்வொன்றையும் முக்கியமாகக் கருதிக்கொண்டாடியது மாறிப்போனது என்றிலிருந்து ?

துணையே தன் உலகம், நம்பிக்கைக்குரியவர், அன்பானவர், கடவுள் பயம் உள்ளவர் என்றெல்லாம் நினைத்தது போக, சந்தேகப் பார்வை பதிய ஆரம்பித்தது ஏன்?

தன்னில் பாதியாக எண்ணிய துணை, திடீரென புது மனிதராக, தன்னிடமிருந்து விலகிக் சென்றவராக மாறியது ஏன்?

இந்தக் கேள்விகள் பிரச்னைக்கான நதிமூலம்,ரிஷிமூலம் பற்றிய ஓரளவு தகவல்களைத் தரலாம். சரி… நடந்தது நடந்துவிட்டது. அடுத்து என்ன ?

ஏமாற்றிய துணையுடன் உட்கார்ந்து பேசி, இருவருக்குமான புதிய உறவைப் பலப்படுத்தப்போகிறோமா ? அல்லது எல்லாம் சரியாகி, சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் தேவைப்படுகிறதா ? சேர்ந்து வாழ்வது என்பதைத் தண்டி, எதிர்காலம் குறித்த வேறு ஏதேனும் திட்டங்கள் இருக்கின்றவனவா ? இதை எல்லாம் சம்பந்தப்பட்ட இருவரும்தான் முடிவு செய்ய வேண்டும். தான் யார், தன் நிலை என்ன என்கிற சுயசோதனையையும் செய்து பார்க்க வேண்டிய காலகட்டம் இது !

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here