Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 74

உறவுகள் சிறகுகள் – பாகம் – 74

382
0
SHARE

ன் செயலை நியாயப்படுத்த தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என மற்றவரது தகாத உறவுகளைப் பற்றிப் பேசி, ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் தவறு. அது தம்பதியருக்கிடையிலான பிரச்னையை இன்னும் பெரிதாக்கும். இனி இப்படி எக்காலத்திலும் நடக்காது என வாக்குறுதி அளிக்கலாம். தேவைப்பட்டால் மேரிடல் தெரபிஸ்ட் எனப்படுகிற திருமண ஆலோசகர் உதவியை நாடி, ஆலோசனை பெற்றும், இதிலிருந்து மீண்டு வரலாம்.

சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில், பொறுப்பில் இருப்பவர்களுக்கு இப்படித் திருமணம் தாண்டிய உறவு உருவாகும்போது. அது எதேச்சையாக நடந்ததாகவும் அதன் பின்னணியில் காதல், அன்பு என எதுவும் இல்லை என்றும் சொல்வார்கள். அப்படிச் சொல்லிக்கொள்வது அவர்கள் தப்பிப்பதற்கான வழி ஆகாது.

தம்பதியரில் ஒருவர் வீட்டு வேலை,குழந்தை வளர்ப்பு,குடும்பத்துக்கான வேலைகளில் மூழ்கி இருந்ததன் காரணத்தால் துணையுடன் தரமான நேரத்தைச் செலவிட முடியாமல் போயிருக்கலாம். உணர்வு ரீதியான பேச்சுவார்த்தைக்குக் கூட இருவருக்கும் நேரம் இருந்திருக்காது. இருவரில் ஒருவருக்கு உண்டான இந்த தகாத உறவுப் பிரச்னைக்குப் பிறகாவது இருவருக்குமான நேரத்தைப் பற்றி யோசித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்து வருகிற நாட்களில் இரு வருக்குமான நெருக்கத் தருணங்களைத் தவற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காலம் என்பது எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பது உண்மைதான். துணையின் கடந்த காலத் தவறையும் காலம் சரி செய்துவிடும். ஆனாலும், அதே தவறு மறுபடி நடக்காமல் பார்த்துக் கொள்வது தவறு செய்து துணையின் கைகளில்தான் உள்ளது.உதாரணத்துக்கு வேலையிடத்தில் ஒருவருடன் அப்படியொரு உறவு உருவாகி,முறிந்திருந்தால், கூடியவரையில் வேறு வேலைக்கு நகர்வதோ, சம்பந்தப்பட்ட நபரின் அருகாமையைத் தவிர்ப்பதோ தான் சிறந்தது. உறவு கொண்டு பிரிந்த அதே நபரின் அருகாமை மீண்டும் அப்படியொரு உறவைத் துளிர்க்கச் செய்யலாம், ஜாக்கிரதை.

டி டே… அதாவது, ‘டிஸ்கவரி டே ‘ என்கிற தினத்தை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையின் தகாத உறவை நீங்கள் கண்டு பிடித்து உறுதி செய்த நாள்தான் டி டே, மன்னிப்பது வேறு… மறப்பது வேறு… இதையும் புரிந்துகொள்ளுங்கள். மன்னிப்பது என்பது மனம் சம்பந்தப்பட்டது. மறப்பது என்பது அறிவு சம்பந்தப்பட்டது. மன்னிப்பது சுலபம். மறப்பது சிரமம்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தவறு செய்த கணவனோ, மனைவியோ துணையிடம் மனம் வருத்தி, கவரவும் பார்க்காமல்,ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால்தான் பிரச்னை சுமுகமாக முடியும். மன்னிப்பே கேட்காமல்,மறுபடி துணையுடனான உறவைத் தொடர நினைப்பது. துணையை கால் மிதியடி மாதிரி சகித்துக் கொள்ளச் செய்வதற்குச் சமமானது.

அது சரி,மன்னிப்பு உபயோகமானதுதானா ? நிச்சயம் உபயோகமானதுதான்.

ஏமாற்றியவருக்கும் சரி,ஏமாற்றப்பட்டவருக்கும் சரி அது உதவும். ஏமாற்றப்பட்டவரின் கோபம் குறைந்து, இயல்பான மனநிலைக்குத் திரும்ப அந்த மன்னிப்பு அவசியம். அதே போல பழுதடைந்த திருமண உறவைச் சீராக்கி, இயல்பு நிலைக்குக் கொண்டு வர, தவறு செய்த துணைக்கும் அந்த மன்னிப்பு அவசியமாகிறது.

பெரும்பாலான குடும்பங்களில் மனைவி வேலைக்குச் செல்பவராக இருந்தால், தவறு செய்த கணவரை மன்னித்து மறுபடி ஏற்பதென்பது கேள்விக்குறியாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அதுவே பொருளாதார ரீதியாகக் கணவரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ள மனைவிக்குக் கணவரின் தவறை மன்னித்து ஏற்றுக்கொள்வதுதான் வாழ்வாதாரத்துக்கான வழியாக இருப்பதையும் பார்க்கிறோம்.

மன்னிப்பதும் மன்னிக்காமல் விடுவதும் அவரவர் மனநிலையை, தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்பதிலும் சந்தேகமில்லை. மன்னிப்பு கேட்பவரை மன்னிப்பதே மனித மாண்பு,மன்னிக்காமல் விடும்போது மனக்கசப்புகள் அதிகமாகி, வெறுப்புகள் கூடி, விரக்தியான மனநிலையே மிஞ்சும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here