Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 79

உறவுகள் சிறகுகள் – பாகம் – 79

336
0
SHARE

ந்த ஒரு விஷயத்துக்கும் சுயமாக முடிவெடுக்கவோ, தெளிவாக முடிவெடுக்கவோ, வலிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவோ ஏதுவாக பெண் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை, அபூர்வமாக அப்படி வளர்கிறவர்களை பெண்களாகப் பார்க்கவும் இந்தச் சமுதாயம் தயாராக இருப்பதில்லை. திமிரெடுத்தவள் என்கிற பட்டத்தைக் கொடுத்து, அவளது அந்தக் குணங்கள் குடும்பத்துக்கு ஆகாதவையாகவும் அறிவிக்கப்படுகின்றன.

அதுவே இந்த அத்தனை குணங்களும் ஆணுக்கு இருந்தால் அது ஆண்மைக்கான அடையாளங்களாகக் கொண்டாடப்படுகின்றன. திருமணத்துக்குப் பிறகு பெண் தன் அடையாளம் இழக்கவும் இதுதான் முதல் விதை.
ஒரு பெண் சமுதாயத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில், மிகப்பெரிய செல்வாக்குடன், சக்தி வாய்ந்தவராக, பலரும் பிரமிக்கத்தக்க ஒரு இடத்தில் இருப்பார். காதல்,கல்யாணம் என்கிற விஷயங்கள் அப்படிப் பட்ட சக்தி வாய்ந்த பெண்ணையுமே தலைகீழாக மாற்றத்தான் செய்கின்றன. காதல் வயப்படத்துமோ, கல்யாணமானதுமோ, அவரது நம்பிக்கைகள் தகர்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடமில்லாததாக உணர்கிறார்.

வாழ்க்கையின் மீதான அவரது விருப்பு, வெறுப்புகள் மாறுகின்றன. காதலர் அல்லது கணவரின் ஆசாபாசங்களுடன் இணைந்து, தன் தனிப்பட்ட கனவுகளைக் காணாமல் போகச் செய்கிறார். நாளடைவில் அந்தப் பெண்ணே காணாமல் போகிறார்.

இந்த மாதிரியான சிக்கல் இரு வகைகளில் பெண்ணுக்கு வருகிறது. ரொம்பவும் நல்ல பெண்ணாக இருப்பார்.அவருக்கு அமைகிற வாழ்க்கைத் துணை, கொடுமைக்காரராக, வன்முறையாளராக இருக்கும்போதும்…
கணவரின் அன்பையும் அரவணைப்பையும் தக்க வைத்துக்கொள்ள, கணவரைத் தன் கட்டுப்பாட்டில் அடக்கி வைத்திருக்கும் போதும்…

இரண்டுமே தவறு. இருவருமே தத்தம் சுயங்களைத் தொலைக்காமல் தனித்தனி அடையாளங்களுடன்தான் வாழப் பழக வேண்டும்.

இப்படி சுயம் இழக்கும் பெண்களை அவர்களிடம் காணப்படுகிற சில மாற்றங்கள் வைத்தே சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here