Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 62

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 62

143
0
SHARE

சர்க்கரை நோயால் ஏற்படும் இரத்த நாள பாதிப்புகள்
பாலுறவு வேட்கை இருந்தால்தானே விரைப்புத் தன்மை உண்டாகும் என்று கேட்கலாம். பாலுறவு வேட்கை இருந்தாலும் கூட விரைப்புத் தன்மை இல்லாத நிலை பல்வேறு சூழல்களில் வந்துவிடுகிறது. குறிப்பாக சர்க்கரை வியாதியின்போது இந்த நிலை பரவலாக ஏற்படுகிறது. இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் விரைப்புத் தன்மை எவ்வாறு உண்டாகிறது என்பதையும், விரைப்புத்தன்மையை உண்டாக்கும் காரணிகள் என்ன என்பதையும், அவற்றின் போக்கையும் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள் .

இரத்த நாளங்கள்
நமது உடல் நாளங்கள் அனைத்தும் வலை பின்னல் அமைப்பை உடையவை. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடையாளமே இந்த நாளங்கள் அனைத்தும் சரியான நிலையில் இருப்பதுதான் என்பது உங்களுக்குத் தெரியும்.

சிலவேளைகளில்இரத்த நாளங்கள் விரிதல், சுருங்குதல், நசிதல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. பிறகு அதுவே பெரிய நோயாக மாறிவிடுகிறது. நோய்களின் போது பாதிப்பின் அளவும் அதிகரிக்கிறது.

சிலர் வயதானவர்களுக்கு தான் இரத்த நாள பாதிப்புகள் வரும் என நினைத்துக்கொண்டிருப்பார்கள். இரத்த நாளங்களில் பாதிப்புகள் எந்த வயதிலும் வரலாம் என்பதுதான் உண்மை.

காரணங்கள்
சர்க்கரை நோய் தவிர இரத்த நாளங்கள் பாதிக்கப்பட நோய்க்கிருமிகள், அதிக கொழுப்பு, மருந்து மாத்திரைகளால் உடல் திசுக்களில் ஏற்படும் அழற்சி, அலர்ஜி, தைராய்டு போன்ற சுரப்பிக் குறைபாடுகள், மனத்தளவிலான டென்ஷன் போன்றவை, உடல் உழைப்பின்மை, வயது, உயரம், எடை, உடற்பருமன், அதிக இரத்த அழுத்தம் போன்றவை காரணமாக இருக்கின்றன.

இரத்தநாள பாதிப்புகள் ஆரம்பத்தில் வெளியே தெரியாது. சுமார் இருபது முதல் முப்பது விழுக்காடு பாதிக்கப்பட்ட பிறகுதான் நோய்க்கான அறிகுறிகள் தெரிய வரும். அதிலும் குறிப்பிட்ட உறுப்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் குரைகள் ஏற்பட்ட பிறகுதான் பிரச்சனை தெரிய ஆரம்பிக்கும்.

உதாரணமாக, தலை சுற்றுகிறது. கண்கள் இருட்டிக் கொண்டு வருகின்றன வார்த்தைகள் சரியாக வராமல் உளறும் நிலை உண்டாகிறது. பேச்சு தடைபட்டுப்போகிறது, கை கால்கள் மற்றும் உறுப்புகள் செயலிழந்து போகின்றன என வைத்துக் கொள்ளுங்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்த பாதிப்பால் பக்கவாதம் வந்துவிடும்.

கைகால்கள் மரத்துபோதல், தசைகள் நலிவடைதல், நடக்கும்போது கைகால்களில் கடுமையான வலியும் சோர்வும் இருத்தல், கொஞ்ச தூரம் நடந்துவிட்டு அதற்கு மேல் எடுத்தடி வைக்க இயலாமல் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு பிறகு ஒரு நூறு மீட்டர் தூரம் மட்டுமீ நடத்தல் போன்ற பிரச்சனை இருந்தால் இரு கால்களில் இருக்கும் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here