Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 84

உறவுகள் சிறகுகள் – பாகம் – 84

1088
0
SHARE

தயம் சொல்வதைப் பின்பற்றுங்கள். ஆனால், அறிவு உங்களை வழிநடத்தட்டும்’ என்றொரு பொன்மொழி உண்டு. திருமண உறவுகளைப் பொறுத்தவரை இதயத்துக்கும் அறிவுக்குமான போராட்டத்தில் இதயம் வழிநடத்த, சுயம் தொலைத்து வாழ்க்கையின் அர்த்தம் இழந்து நிற்கிற பெண்களே அதிகம் !

திருமண உறவில் சுயத்தைத் தொலைக்கிற பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். தொலைந்து போனவர்களுக்கும் தொலைந்துவிடாமல் இருக்க நினைப்போருக்குமான விஷயங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

திருமணத்துக்குப் பிறகும் பெண்கள் தமக்கான ரொட்டீனை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். உதாரணத்துக்கு வேலையைத் தொடர்வது, உடற்பயற்சி செய்வது போன்றவை… ஆனால், திருமணத்துக்குப் பிறகு கணவரையும் புகுந்த வீட்டாரையும் திருப்திப் படுத்த பெண்கள் வேலையைத் துறக்கிறார்கள். எத்தனை பெரிய பதவியில் இருக்கும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவர்கள் மனைவிக்காக அப்படி எந்தத் தியாகத்தையும் செய்வதில்லை. வேலையை விடத்துணிகிற பெண், அதைத் தொடர்ந்து சந்திக்கப் போகிற பிரச்னைகளைப் பற்றி யோசிப்பதில்லை. முதல் விஷயம் பொருளாதார ரீதியாக கணவரைக் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாள்.

கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவர் வீடு திரும்பும் வரை திசை தெரியாத பறவை மாதிரி காத்திருக்கிறாள். என்ன செய்வது, யாரிடம் பேசுவது எனத் தெரியாத அந்தத் தவிப்பு மிக மோசமானது, அதற்குப் பதில் கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து பேசி,மனைவி வேலையை விடுவதற்கு மாற்று இருக்கிறதா என யோசிக்கலாம். தியாகம் என்பது ஒருவழிப் பாதையாக இல்லாமல் இருவரும் சேர்ந்து செய்வதாக இருக்க வேண்டியது உறவுகளில் மிக முக்கியம்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் எனப் பல நடிகைகள் அறிக்கை விட்டு மண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கிறோம். திருமணத்துக்கு முன்பு வரை அந்த நடிகை விருதுகள் பல வென்ற,வெற்றிகரமான, முன்னணி நடிகையாக வலம் வந்திருப்பார். ஆனால், திருமணம் என வரும் போது எதைப் பற்றியும் யோசிக்காமல் அத்தனையையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிடத் தயாராவார்கள். இது நடிகைகள் என்றில்லாமல் பிரபலமாக இருக்கிற பெரும்பாலான பெண்களுக்கும் ஏற்படுகிற பிரச்னையே. அதுவே திருமணம் என்கிற புதிய உறவு எந்த ஆணையும் அவனது பழைய வாழ்க்கையை அப்படியே தொடரச் செய்வதற்குத் தடையாக அமைவதில்லை.

திருமணத்துக்கு முன்பு ஒரு பெண்ணிடம் அவளது புகழோ,திறமையோ,பிசினஸ் சாதுர்யமோ இப்படி ஏதோ ஒன்று ஈர்த்து, அவளைக் காதலித்து ஓர் ஆண் திருமணம் செய்திருப்பான். ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவள் மறக்க வேண்டிய முதல் விஷயமாகவும் அந்தப் புகழும் திறமையும் சாதுர்யமுமாகவே இருப்பதுதான் கொடுமை. ஆண் தன்னை சக்தி வாய்ந்த நபராகக் கற்பனை செய்து கொள்கிறான். தான் சொல்வதுதான் விதி… வைத்ததுதான் சட்டம் என்கிற நினைப்பில் தனது ஆற்றலைத் துஷ்பிரயோகம் செய்கிறான்.

நான்கு பேர் பாராட்டும் இடத்தில் பெயரோடும் புகழோடும் ஆளுமையோடும் இருந்த தன் மனைவியை இப்படி அடக்கி வீட்டுக்குள் முடக்குவது அவளுக்கு மட்டுமல்ல தனக்குத் தானே பாதகம் ஏற்படுத்திக் கொள்கிற செயல் என்பதைப் பெரும்பாலான ஆண்கள் உணர்வதில்லை. கணவருக்கு விருப்பமில்லையென வேலையை விடுகிற பெண்கள் 50 சதவிகிதம் என்றால், கணவர் அப்படிச் சொல்லாமல் தாமாகவே முன்வந்து வேலையை விடுகிறவர்கள் 50 சதவிகிதம். இரண்டிலுமே சம்பந்தப்பட்ட பெண் தன் தனித் தன்மையைத் தொலைக்கிறாள். முழுமையான மனுஷியாக வாழ முடியாமல் தவிக்கிறாள்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here