Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 85

உறவுகள் சிறகுகள் – பாகம் – 85

199
0
SHARE

திருமணத்துக்கு முன்பு அழகிலிருந்து ஆரோக்கியம் வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிற பெண்கள், திருமணத்துக்குப் பிறகு தலைகீழாக மாறிப் போகிறார்கள். அதனால் அதிக பருமனாகிறார்கள். அந்தப் பருமன் தோற்றம் அவர்களைத் தனிமைப்படுத்துவதுடன், மன அழுத்தத்திலும் தள்ளுகிறது.

திருமணத்துக்கு முன்பு நிறைய நட்புடன் வாழ்கிறவர்கள், திருமணமானதும் நட்பை மறக்கிறார்கள். இந்த விஷயத்திலும் ஆண்கள் விதிவிலக்கானவர்கள், திருமணம் என்கிற விஷயம் அவர்களின் நட்புக்கு எந்த வகையிலும் தடையாக அமைவதில்லை.

இப்படிப் பல விஷயங்களாலும் மாறிப் போகிற பெண்ணுக்கு நாளடைவில் ஒரு குழப்பம் வருகிறது. காலையில் கணவர் வேலைக்குப் போனதிலிருந்து மாலை வீடு திரும்பும் வரை அவனுக்காகக் காத்திருக்கிறாள். வந்ததும் தன்னைக் கவனிக்க வேண்டும்… தன்னிடம் பேச வேண்டும்… தான் பேசுவதைக் கவனிக்க வேண்டும்… அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாள். ஆனால், கணவன் அப்படி நினைப்பதில்லை.

இருவரும் வேலைக்குப் போகிற போது இருவருக்கும் இடையில் ஓர் ஆரோக்கியமான இடைவெளி இருக்கும். ஆனால்,மனைவி வேலைக்கும் போகாமல் தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிற மாதிரி எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் இருக்கும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என மனைவி காத்திருக்க, கணவனோ மனைவியிடமிருந்து எப்படித் தப்பிக்கலாம் என யோசிக்கிறான். வேலை அதிகம், மீட்டிங், வெளியூர் பயணம் என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, வீட்டுக்கு வருகிற நேரத்தைக் குறைகிறான். திருமணத்துக்குப் பிறகு தான் முழுமையாக கைவிடப்பட்டதாக உணர்கிறாள் மனைவி. தன்னைக் கவனிக்க ஆளில்லை எனக் குமுறுகிறாள். தன்னைத் தானே கவனித்துக்கொள்கிற மனநிலைக்கு வந்து விட்டால் பெண்கள் இதைக் தவிர்க்கலாம், திருமணத்துக்கு முன்பிருந்த நட்பையும் ஈடுபாடுகளையும் திருமணத்துக்குப் பிறகும் அவள் அப்படியே தொடர்வதுதான் ஒரே வழி.

சாந்தினியை திருமணத்துக்கு முன்பிலிருந்தே எனக்குத் தெரியும். மிகவும் கலகலப்பானவள். பயங்கர புத்திசாலி. யாருடனும் சட்டென நட்பாகிவிடக்கூடியவள். அவள் திருமணம் செய்த விக்கியோ அவளுக்கு அப்படியே நேரெதிர் குணாதிசயம் கொண்டவன். ‘ திருமணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணா இருந்திருக்கலாம்… இனிமே நான் சொல்றபடிதான் இருக்கணும்… இப்படி எல்லார்கூடவும் சிரிக்கிறதும் பேசுறதும் எனக்குப் பிடிக்காது. ஃப்ரெண்ட்ஸ் யாரும் வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது. நீயும் அவங்களோட சுத்தக்கூடாது… ‘ என சாந்தினிக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் விதிக்க, விக்கியை பிடித்த காரணத்தால் அவன் கண்டிஷன்களையும் ஏற்றுக்கொண்டாள். சிரமமாக இருந்தாலும் தன்னை மாற்றிக்கொண்டாள்.

கொஞ்ச நாட்களிலேயே அவளது சிரிப்பு, கலகலப் பேச்சு, நட்பு பாராட்டுகிற மனசு என எல்லாம் காணாமல் போனதைப் பார்த்தேன், விக்கி திடீரென வெளியூரில் ஒரு பயிற்சிக்காகக் சென்றுவிட, பேசக்கூட ஆளில்லாமல் தனிமையில் தள்ளப்பட்டாள் சாந்தினி. தனக்கு இனி யாருமே இல்லையே… என்கிற பயம் அதிகமாகி, அது நாளடைவில் மன அழுத்தத்தில் தள்ளி, மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, தற்போது மனநல சிகிச்சையில் இருக்கிறாள் சாந்தினி. இந்த மாதிரி ஏகப்பட்ட சாந்தினிகள் மன அழுத்தத்தில் உழன்றுகொண்டுதான் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவியை முழுக்க முழுக்க தனக்கேற்றபடி மாற்ற நினைக்கிற எந்தக் கணவனும் தன்னை ஒரு சதவிகிதம்கூட மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. இத்தகைய உறவுகளில் காதல் என்பதே இருக்காது.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here