Home pregnancy எல்லோருக்கும் குழந்தை : I

எல்லோருக்கும் குழந்தை : I

149
0
SHARE
beautiful young couple sitting on a sofa

இயற்கையாகவே எல்லா தம்பதியருக்கும் குழந்தைப்பேறு கிடைத்து விடாதா ?

தமிழ் சினிமாக்கள் நம் மக்களிடையே ஒரு தவறான நம்பிக்கையை ஆழமாக விதைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரே ஒரு முறை உறவு கொண்டாலும், அல்லது தேனிலவு முடிந்ததும் ஒரு பெண் கர்பமடைந்துவிட்டதாக காட்டுவார்கள். இப்படி நடப்பதற்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவாகும். ஒரு தம்பதியர் தகுதியான நல்ல உடல்நிலையில் இருந்து, ஒரு மாத காலத்தில் தினமும் உறவு கொள்கிறார்கள் என்றாலும் அந்த பெண் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பு இருபத்தைந்து சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. விலங்கினம், பறவைகள் போன்ற எல்லா உயிரினங்களையும்விட மனித இனம்தான் குறைவான அளவில் கருத்தரிக்கும் சக்தியுடையதாகும்.

ஒரு நாணயத்தை சுண்டி விடும் பொழுது நீங்கள் எதிர்பார்க்கும் “பூ” அல்லது “தலை” விழுவதற்கான வாய்ப்பு என்பது ஐம்பது சதவிகிதம் மட்டுமே. அதுபோன்றே கர்ப்பம் என்பது நீங்கள் எதிர்பார்க்கும் தருணத்தில் நிகழலாம் அல்லது நிகழாமல் போகலாம். ஆனால் எப்போதாவது நீங்கள் எதிர்பார்க்கும் “பூ” விழுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பது போன்று திருமணம் முடித்த ஒரு வருட காலத்தில் 85% வரையிலான பெண்கள் கர்ப்பம் அடைந்து விடுகிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எட்டு தம்பதியரில் ஏழு பேருக்கு குழந்தை பாக்கியம் ஒருவருட காலத்தில் கிடைத்து விடுகிறது. மீதமிருக்கும் அந்த ஒரு தம்பதியர்தான் குழந்தை பெற முடியாதவர்கள்.

குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா ?

குழந்தையின்மை என்றதும் மிகப் பெரிய நோயாக நினைத்து பலர் பயந்து விடுகிறார்கள். உண்மையில் இது ஒரு நோயல்ல, குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்கள் மற்றும் மருத்துவர் துணையின்றி கர்ப்பத்தை சுமக்க முடியாதவர்களை மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம்.

 

குழந்தையின்மையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒரு முறை கூட கர்ப்பம் தரிக்காதவர்களை முதல் நிலையினர் என்றும் கர்ப்பம் தரித்து பல்வேறு காரணங்களால் குழந்தை பெற முடியாத நிலையை அடைந்தவர்களை இரண்டாம் நிலையினர் என்றும் பிரிக்கலாம். முதல் நிலையில் இருப்பவர்களை விட இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் மூலம், விரைவில் பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

மலட்டுத்தன்மை சிகிச்சைக்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது உண்மையா ?

இது மிகவும் தவறான ஒரு கருத்தாகும். சிலருக்கு மருந்து, மாத்திரையிலேயே குணமாகும் வாய்ப்பு இருக்கும் எனும்பட்சத்தில் மிகமிகக் குறைந்த செலவில் குழந்தைபேறு பெற முடியும். ஆனால் ஒரு சிலருக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை போன்ற நவீன சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக செலவாகலாம். இன்று மருந்து சாப்பிட்டதும், இந்த மாதமே குழந்தை உருவாக வேண்டும் என ஆசைப்படாமல் காத்திருக்க வேண்டியதுதான் இந்த சிகிச்சைக்கு அவசியமாகும். ஆனால் இதயம், கிட்னி போன்ற நோய்களுக்கு ஆகும் செலவுகளை ஒப்பிட்டால் குறைவு என்றேதான் சொல்ல வேண்டும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here