உடற்பயிற்சி செய்கிற வழக்கமுள்ளவரா?
ரொம்ப நல்லது. அதே நேரம் உடற்பயிற்சிக்குப் பிறகு உங்கள் உடல் வலிகளைக் கவனிக்கவும். உடலுக்கு ஓய்வு தேவைப்படும்போது கொடுக்கவும் தவறாதீர்கள். மென்மையான மசாஜ், நீராவிக்குளியல் என உடலை ரிலாக்ஸ் செய்ய ஏகப்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்கு பொருந்திப் போகும் ஒன்றை பின்பற்றுங்கள்.
தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தியானமா?
அதெல்லாம் நமக்கு சரியா வராது. ‘கண்ணை மூடி உட்கார்ந்தா கண்டதும் ஞாபகம் வருது’ என்பதுதானே உங்கள் வாதம். தியானம் செய்ய ஆரம்பிக்கும்போது எல்லோரும் சொல்கிற குற்றச்சாட்டுதான் இது. ஆனால் போகப்போக சரியாகி உங்கள் மனமும், உடலும் தியானத்துக்குப் பழகிவிடும். உங்களுக்கு பிடித்த, அமைதியான இடத்தில் வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். உங்கள் கவனம் முழுவதும் உங்கள் சுவாசத்தில் இருக்க வேண்டும்.
உடை அணிகிற விதம் மற்றும் ஹேர் ஸ்டைலை மாற்றுவதுகூட ஒருவகையில் உங்கள் மன அழுத்தத்தை விரட்டி, உங்களை உடலளவிலும், மனதளவிலும் உற்சாகமாக வைக்கும்.
சிரிப்பை மறக்க வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் சந்தோசமாக இருக்க முயற்சி செய்யுங்கள். வாய்விட்டு சிரிப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வருகிறதாம். இதயம் நன்கு இயங்குகிறதாம். மன அழுத்தம் குறைகிறதாம். எனவே மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் நிறைய நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது, அப்படிப்பட்ட சம்பவங்களை அசை போடுவது, நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்களுடன் இருப்பது போன்றவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் ஹியூமர் கிளப்புகளில் சேர்ந்தும் உங்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்