Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 91

கரு முதல் குழந்தை வரை – பாகம் 91

376
0
SHARE

முதல் நிலை

கருப்பை கழுத்தின் திறப்பு

பொதுவாக , கருப்பை கழுத்து மூடியிருப்பது வழக்கம் . பிரசவ நேரத்தில் ஏற்படும் கருப்பை தசை சுருக்கங்கள் , கருப்பை வாய் பத்து செ.மீ அகலமாகும் வரை திறக்க செய்கிறது . அதாவது , குழந்தை கடந்து செல்வதற்கு போதுமான அளவு கருப்பை வாய் திறக்கிறது .

நேரத்துக்கு நேரம் , உங்களுக்கு எவ்வாறு பிரசவம் நிகழ்ந்து வருகிறது , கருப்பை கழுத்து எவ்வளவு தூரம் திறந்திருக்கிறது , குழந்தையின் இதய துடிப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள மகப்பேறு மருத்துவர் தொடர்ந்து உங்களை பரிசோதிப்பார்

படிப்படியாக , தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும், வலி அதிகமாக எடுக்கும் , முதல் நிலையின் இறுதி பகுதியில் , ஒவ்வொரு முறை தசை சுருக்கம் வரும்போதும் , நீங்கள் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என் நினைக்க ஆரம்பிப்பீர்கள் .

கருப்பை கழுத்து முற்றிலுமாக திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்க கூடாது . முக்கி குழந்தையை உந்தி தள்ள வேண்டும் என்ற உந்துதலை அடக்கி கொள்ள மெதுவாகவும் நேர்த்தியாகவும் மூச்சை இழுத்துவிட வேண்டும் .

நெருக்குதல் அதிகமாக இருப்பதுபோல் தெரிந்தால் பெரு மூச்சாக மூச்சை இழுத்துவிட வேண்டும் .
முதல் நிலைக்கும் இரண்டாம் நிலைக்கும் இடையே ஐந்து முதல் நாற்பத்தைந்து நிமிட இடைவெளி இருக்கும் . கருப்பையானது கருவை வெளித்தள்ளுவதற்காக போராடும் . இந்த நேரத்தில்தான் கர்ப்பிணிக்கு மன உளைச்சலும் அதிர்ச்சியும் அதிகமாக இருக்கும் .

இரண்டாவது நிலை

இரண்டாவது நிலையானது 15 முதல் 120 நிமிட நேரம் வரை நீடிப்பதுண்டு. இரண்டாவது நிலையில் குழந்தை கீழ் இறங்கும் . கருப்பை வாய் போதுமான அளவு அகலமாக திறந்தவுடனே , தசை சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றி கொண்டு, அதிக வேகத்தோடு இயங்கும், ஒவ்வொரு சுருக்கத்துக்கு பிறகும் கருப்பையின் தசை நார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுக தொடங்கும். இதனால் யோனிக்குள் குழந்தை தள்ளப்படுகிறது .

பிறப்புறுப்பு தசைகள், இணைப்பு தசை மற்றும் யோனியில் இருந்து வெளிப்பக்கமாக செல்லும் இடுப்புக்கூட்டின் மேற்பகுதி தோல் ஆகியவை நெகிழ்ச்சியடைய சிறிது நேரம் எடுத்து கொள்கின்றன. சிறிது கடினமான முயற்சிக்கு பிறகு குழந்தை பிறக்க ஆரம்பிக்கும் .

இரண்டாவது கட்ட பிரசவம் , ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். யோனி திறப்பில் குழந்தையின் தலையின் அரைபாகம் தெரியும் வகையில் இருக்கும்போது , நேர்த்தியாக வாயால் காற்றை இழுத்து வேகமாக முக்க வேண்டும் .

அதே சமயம் , நேர்த்தியாக இந்த் செயலில் ஈடுபட வேண்டும் . இல்லாவிட்டால் , சருமம் , மென் திசுக்கள் , உங்கள் ஆசனவாயின் பின்பகுதி மற்றும் யோனிக்கு இடையில் உள்ள ஆசனவாய் சூழ்தசைகள் ஆகியவையெல்லாம் சிரமத்துக்கு உள்ளாகும். குழந்தையின் தலை வேகமாக வெளியே வந்தால் சில வேளைகளில் தசைகளும் திசுக்களும் கிழிந்துவிட நேரிடும் .

சில சமயங்களில் , ஆசனவாயை சுற்றியில் தோல் போதுமான அளவுக்கு நெகிழ்ந்து கொடுக்காது. இந்த நிலையில் தான் ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் உள்ள பகுதியில் உணர்விழப்பு செய்து அந்த தோலை துண்டித்து விடுவார். இதற்கு எபிசியோடமி அல்லது யோனி வாய்திறப்பு என்று பெயர் .

குழந்தையின் தலை வெளியே வந்ததும் , பெரும்பகுதி கடினமான வேலைகள் முடிந்துவிடும் . அடுத்து , ஒன்றுக்கு மேற்பட்ட முக்குதல்கள் மூலமாக எஞ்சியுள்ள உடல்பகுதிகள் விரைந்து , சுலபமாக வெளியேறும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here